* அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவிப்பு
ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கும்படி கிழக்கு முஸ்லிம்களை அஷ்ரப் ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை. ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் சொப்பிங் பையுடன் ஓடவேண்டிவருமென்றே எச்சரித்திருந்தாரென தெரிவித்த அமைச்சர் பேரியல் அஷ்ரப், ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் அதிகம் தெரியுமெனவும் ஆண்களுக்கு அரசியலை சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஐ.ம.சு.முன்னணி சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் உஷா சலீமை ஆதரித்து சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியதாவது,
சாய்ந்தமருது மக்கள் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்கள். சகலவற்றையும் எடுத்துக்கூறத் தேவையில்லை. ஆண்களைவிட பெண்களுக்கு நன்கு அரசியல் தெரியும். ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். கோபம் உள்ளவர்கள் எதையும் பொறுமையுடன் இருந்து பெறமுடியாதவர்கள். அந்தவகையில்தான் சொல்லுகின்றேன், பெண்கள்தான் ஆண்களுக்கு அரசியலை சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாயத்தேவை இன்று எழுந்துள்ளது.
நோன்பு பிடித்து முந்தானைகளை ஏந்தி வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று எம்மத்தியில் இல்லை. முஸ்லிம் காங்கிரஸை அழித்துவிட்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று கங்கணம்கட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து பவனி வருகிறார்கள்.
உரிமை என்ற வெறும் கோஷங்களினால் எங்களது பிரதேசங்கள் அழிந்த நிலையில் உள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டும். தொழில் வாய்ப்புகளை எங்களது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். உரிமையோடு அபிவிருத்தி காணவேண்டும். அதனால் இம்முறை வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து ஜனாதிபதியின் கையைப் பலப்படுத்தவேண்டும்.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நாங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், நிம்மதியற்ற வாழ்க்கை அனைத்தும் தெரியும். இந்நிலை தொடர்ந்தும் இனிவேண்டாம். அரசு கிழக்கை மீட்டெடுத்து நிம்மதியான சூழலை எற்படுத்தி மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி தேர்தலை நடாத்தி அபிவிருத்தி வேலைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணையைக் கோரியுள்ளது.
அந்தவகையில், வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து அரசின் கையை பலப்படுத்தவேண்டும். ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கச் செய்து எங்களது பிரதேச அபிவிருத்திகளை பாழடையச்செய்து மூவின மக்களாகிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனவாதங்களைத் தூண்டி நிம்மதியாக இருக்கும் கிழக்குமாகாண சூழலை சீர்குலைக்க வேண்டாம்.
ஐ.தே.கட்சிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்குகளும் எமது பிரதேசங்கள் சூறையாடவும், பிள்ளைகளின் எதிர்காலம் இருளாக்கவும், அபிவிருத்திகளை தடைசெய்யவும் பயன்படுத்தப்படுவதுடன், சொப்பிங் பையுடன் நடுத்தெருவில் நிற்கக்கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.