* பிரதியமைச்சர் நிஜாமுதீன் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க.வுக்கு முஸ்லிம்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகள், சக்திகளை பலப்படுத்துவதாகவே அமையுமென பிரதியமைச்சர் நிஜாமுதீன் தெரிவித்தார்.
சம்மாந்துறை மல்வத்தையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான சக்திகளான நோர்வே, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளை பலப்படுத்துவதுடன் முஸ்லிம்களின் கருத்துக்களில் வைக்கின்ற கத்தியாகவும் மாறும் என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு வருட ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மூதூர் தொடக்கம் பொத்துவில் வரையான சம்பவங்களை சற்று எடுத்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்தது மட்டுமல்ல உறவினர்கள் கண்முன்னே ஜனாஸாக்களை பெற்றோல் ஊற்றி எரித்த போதும் ரணிலுடைய ஆட்சிக் காலமும் ஆட்சியாளர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்த நிகழ்வும் இன்னும் எம் மனதை விட்டு அகலவில்லை.
நாம் பாதுகாப்பற்றவர்களாக இருந்த போது எமக்கு பாதுகாப்பு வழங்கியது ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. முதலமைச்சரை பெறுவதாக இருந்தால் கிழக்கில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களும் வெற்றிலைக்கு வாக்களிப்பதன் மூலம் தான் அதனை பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் கூடுதலாக ஆசனங்களை பெறுகின்றவர்கள் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள முடியும் என உறுதிபடக் கூறியுள்ளார். அந்த வகையில் கிழக்கு மாகாணம் முஸ்லிம் மாகாணம் என்பதை உறுதிப்படுத்துகின்ற தேர்தல் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஆகும். கிழக்கு முஸ்லிம்கள் தமது வாக்குகளை சிதற விடாமல் சிந்தித்து வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக கிழக்கு முஸ்லிம் மாகாண சபையையும் முதலமைச்சரையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை கை நழுவவிட்டு பின்னர் தலையில் கை வைப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற மு.கா. தலைமைக்கு வாக்களிப்பதன் மூலம் எமக்கு எவ்விதமான பிரயோசனமும் கிடைக்க போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் மரத்துக்கு நாங்கள் வாக்களித்து பழக்கப்பட்டிருந்தாலும் பழக்கப்பட்ட அந்த மரச்சின்னம் இன்று எங்கள் மத்தியில் இல்லை. மரத்தை வெட்டி யானைக்கு இரை போட்டுவிட்டு யானையில் பவனி வருகிறார்கள்.
மு.கா.தலைமையை நம்பி ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் எமது சிறார்களின் எதிர்கால வளர்ச்சியை பாழாக்குகின்ற ஒரு சக்தியாக மாறி விடும். ஆகவே, நீங்கள் அளிக்கவுள்ள இந்த வாக்கை வெற்றிலைச் சின்னத்திற்கு போட்டு எமது இன வரலாறு, உரிமை, அபிவிருத்தி என்ற இலட்சியப் பாதையில் ஒன்று பட்டு இச்சந்தர்ப்பத்தை பெறுமதிமிக்கதாக மாற்றி அமைப்போம்.