* தோட்டத் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வரும் அபாயம்; எச்சரிக்கின்றார் முத்துசிவலிங்கம்
மலையக மண்ணை அபகரிக்க இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலைமை தொடருமானால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது தொழில் வாய்ப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து அநாதைகளாக நடு வீதிக்கு வர நேரிடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான முத்துசிவலிங்கம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரிக்கான மூன்று மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
மலையக மண்ணை பறித்தெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மலையகத் தொழிற்சங்க தலைமைத்துவங்களையே சார்ந்துள்ளது. எனவே இத்தலைமைத்துவங்கள் தமக்கிடையிலான அரசியல் கட்சிபேதங்களையும், கொள்கை வேறுபாடுகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு கருத்தொருமித்து ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் இறப்பர் தோட்டங்களில் தொழில் செய்து வந்த மலேசியா நாட்டு தொழிலாளர்கள் செல்வந்தர்களாக வாழ்ந்து பின் குடியிருப்புகளை இழந்து வீதி ஓரங்களில் சிறு குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.
இதேநிலை எமது தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் முன் தடுத்து நிறுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்பதை மலையக அரசியல் தொழிற்சங்க தலைமைத்துவங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
எனவே, நாம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தை மட்டும் அபிவிருத்தி செய்யாது கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் அனைத்து பிரதேசங்களையும் பாரபட்சமின்றி அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
இன்று ஒரு சில பேரின வாதிகள் சிறுபான்மை சமூகங்களான எம்மை மேலும் சிறுபான்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, நாம் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் வாழ்வது அவசியமானதாகும். அன்று எம் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கட்டுக் கோப்பும் ஓங்கி இருந்தமையாலேயே அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் தனியொரு மனிதராக செயற்பட்டு அளப்பரிய சாதனைகளை படைத்தார்.
எம்மில் ஐவர் அமைச்சர்களா இருந்த போதும் ஐவரும் ஒன்று சேர்ந்தேனும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானைப் போன்று சாதனை படைக்க முடியாமல் உள்ளது.
அமரர் தொண்டமான் போன்றே முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஏ.எச்.எம். அஸ்ரப்பும் தனி ஒரு மனிதராகச் செயல்பட்டு முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்.
ஆனால், இன்று சகோதர முஸ்லிம் சமூகத்தின் நிலையை நோக்கும் போது பெரும் வேதனையாக உள்ளது. அவர்கள் இன்று ஐந்து, ஆறு பிரிவுகளாக பிரிந்து நின்று செயற்படுகின்றனர். இது எம்மை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் பேரினவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்து விடும்.
எனவே, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் முதலில் தத்தமது சமூகத்துக்குள் ஒன்றுமையை ஏற்படுத்திக் கொண்டு பின் இரு சமூகங்களும் கருத்தொருமித்து ஒற்றுமையுடனும் வாழ்வது மூலமே இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களான நாம் தன்மானத்துடனும் சுபிட்சமாகவும் சுய கௌரவத்துடனும் சுதந்திரமாக வாழ முடியும்.
இப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளில் ஒரு சிலர் மட்டுமே விபூதி திலகமிட்டு பாடசாலைக்கு வருகின்றனர். ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எமது கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு மாணவர்களு க்கு வலியுறுத்த வேண்டும்.
மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி பேசும் போது கூறியதாவது;
கடந்த வருடம் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு மூலம் 31 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது. இவ்வருடம் மேலும் ஒரு சில பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கல்வி வளர்ச்சி மூலம் மட்டுமே எமது மலையக சமூகத்தை சகல வளமும் பெற்ற சமூகமாக வளர்த்தெடுக்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து காரணிகளையும் தகர்த்தெறிந்து மலையக கல்வியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றேன் என்றார்.