இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கூட்டம் அண்மையில் மாத்தளை மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மேற்படி சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மேதினக் கோரிக்கைகள் வருமாறு;
மலையகத்திலுள்ள சகல பாடசாலைகளையும் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உட்பட்ட தேசிய சம்பளத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
தொழிலாளர்களை பொருளாதார சுமையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கம்பனி, அரச தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக்கி அவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தை தோட்டப் புறங்களிலும் அமுல் படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். தோட்டப்புற இளைஞர்களுக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கி தோட்டப் பகுதிகளில் தொழிற்பேட்டைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தனியார் உற்பத்தி முறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாக்க முறையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்னது.