* அமைச்சர் மில்ரொய் பெர்னாண்டோ உறுதியளிப்பு
மடு தேவாலயம் ஒருபோதுமே இராணுவ பிரதேசமாக்கப்படாது. தற்போது கூட மடு தேவாலயத்திலிருந்து 3 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் பகுதியிலேயே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனரென அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
விடுதலைப் புலிகளிடமிருந்து மடுத் தேவாலயத்தை மீட்டெடுத்ததற்காக ஜனாதிபதிக்கும் படையணிக்கும் கத்தோலிக்க மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மடுமாதா தேவாலயத்தை துப்புரவாக்கவும் சேதமடைந்திருக்கும் கூரைப் பகுதியை திருத்தியமைக்கவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். அத்துடன், மடுவுக்கு 3 குருமாரும் ஒரு சாரதியும் ஒரு சமையற்காரரும் செல்வதற்கு மன்னார் ஆயர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார்.
மடுவிலிருந்து 3 கிலோமீற்றருக்கு அப்பாலேயே இராணுவத்தினர் தற்போது உள்ளனர். ஜுலை மாதம் நடைபெறவுள்ள உற்சவத்திற்கு அனைத்து மக்களும் செல்ல வழிவகை ஏற்படுத்தப்படவுள்ளது. சகல மக்களும் பாதுகாப்பாக இவ்விடத்துக்கு சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடுவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, அங்கு சிவில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.