ஆபத்தான நிலையில் மட்டு.ஆஸ்பத்திரியில்அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினருமான ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரான சமீம் ஆப்தீன் (27 வயது) என்பவரே பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
கை, கால்கள், மார்புப் பகுதியென சகல இடங்களிலும் வாள் வெட்டுக்கிலக்காகி கை விரல்கள் சிலவற்றையும் இழந்த இவர் உடனடியாக அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
முக்கிய அமைச்சர் ஒருவரது கையாட்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இவர் இந்தத் தாக்குதலுக்கிலக்கானார்.