அட்டன் மே தினக் கூட்டத்தில் செந்திவேல் யுத்தத்தின் அழிவுகளும் பொருளாதார வீழ்ச்சிகளும் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்தி உரிய தீர்வுகளை முன்வைக்கும் ஆற்றல் மகிந்த சிந்தனை அரசாங்கத்திடம் இல்லை என்பதை அதன் நடைமுறைகள் நிரூபித்து நிற்கின்றன.
அதேவேளை, ரணில் சிந்தனை என்பது பதவிக்கு வந்தாலும் கூட இன்றைய பூதாகரமான எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது. ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகளாக யுத்தமும் உலகமயமாதலும் என்ற இரட்டைப் பிசாசுகள் இலங்கையின் ஆளும் வர்க்க சக்திகளை ஆட்டிப்படைத்து வந்துள்ளன. இவற்றை எதிர்த்து மக்கள் எழுச்சி ஏற்படாத வரை இந்நாட்டிற்கும் மக்களுக்கும் விமோசனம் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறு அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற புரட்சிகர மேதினக் கூட்டத்தில் உரையாற்றும்போது புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கூறினார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் இ.தம்பையா தலைமையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் செந்திவேல் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது;
கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றியைப் போன்று வடக்கிலும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே வடக்கு நோக்கிய யுத்தம் முடுக்கி விடப்பட்டு வருகின்றது. இதனைக் காட்டியே தெற்கில் எழுந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி திசைதிருப்பப்படுகிறது. நாளாந்தம் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை மறைக்க யுத்தம் ஒரு வலுவான திரையாக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தில் வெற்றிபெறும் வரை உங்கள் வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக் கொள்ளுமாறு சிங்கள மக்கள் கேட்கப்படுகிறார்கள்.
இன்று ஒரு கிலோ அரிசி 100 ரூபா வரை விற்கப்படுகிறது. தேங்காய் நாற்பது ரூபாய்க்கும் பாண் முப்பத்தைந்து ரூபாய்க்கும் விலை போகிறது. நாடு முழுவதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் சாதாரண விவசாயிகளும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களும் அரைப்பட்டினி நிலையிலிருந்துமுழுப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். அதேவேளை, வடக்கில் பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்காகிக் கொண்டுள்ளது. அத்துடன் அங்கு நடமாடும் சுதந்திரமும் உயிர்வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளநிலை நீடித்து வருகின்றது.
கிழக்கின் தேர்தல் நியாயமான வழிகளில் இடம்பெறுமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. எவ்வாறாயினும் அங்கு நடந்து முடியும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்வுக்கு வந்துவிடப் போகிறதா? மகிந்த சிந்தனை என்பதன் ஊடாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் யாவும் முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்க கொள்கைகளே அன்றி வேறெதுவும் இல்லை.
பாராளுமன்ற அரசியல்வாதியாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மகிந்த ராஜபக்ஷ வேறு இன்று நிறைவேற்று அதிகார பீடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ வேறானவர் என்பதை முன்னாள் இடதுசாரிகள் பலர் காண மறுக்கின்றனர். யுத்தத்தையும் உலகமயமாதலையும் அரவணைத்துக் கொண்டு எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதைச் சிந்திக்காது மக்களுக்குரிய அரசியலை எவர் முன்னெடுத்தாலும் அத்தகையோரால் மக்களை ஏமாற்ற மட்டுமே முடியும். எனவே, யுத்தத்தை நிறுத்தி நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்கும் வழிவகைகள் காணப்படல் வேண்டும் என்பதை எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு- கிழக்கு இணைந்த பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் நிறைவேற்றப்படக் கூடிய முழுமையான சுயாட்சி என்பது அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதையே நாம் கோரி வருகின்றோம்.
தம்பையா
கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா தனது உரையில் கூறியதாவது;
இன்றைய பொருளாதார நெருக்கடிகளின் சுமைகள் யாவும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களதும் தலைகள் மீதே சுமத்தப்பட்டு வருகின்றது. அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யாவும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது.
இவற்றை தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்தக் கூடிய தொழிற்சங்கங்களும் அரசியல் சக்திகளும் மௌனம் காத்து வருகின்றன. மக்களும் பேரினவாத யுத்தவெறியப் பிரசாரத்தால் திசை திருப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கும் அப்பால் அவசரகாலச் சட்டித்தின் கீழ் நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விசாரணை இன்றி நாடு முழுவதும் சிறைகளில் இருந்து வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை செய்ய வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்தி வருகின்றது.
அதேவேளை, இன்று இலங்கை என்றுமில்லாதவாறு அமெரிக்க மேற்குலக இந்திய ஆதிக்க சக்திகளின் போட்டிக்களமாக மாற்றப்பட்டுள்ள சூழலைக் காண்கின்றோம். சகல வழிகளாலும் நாடு மீளமுடியாத பிரச்சினைகளுக்கு தான் சிக்கி வருகிறதே தவிர, அடிப்படையானதும் பிரதானதுமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தவொரு முறையும் திறக்கப்படுவதாக இல்லை.
ஆதலால், மக்கள் விழிப்புற்று அரசியல் அரங்கில் கேள்விகளை எழுப்பக் கூடிய புதிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்தி வருகின்றது.
இம் மேதினக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கோ.தேவராஜா, மலையகப்பிரதேசச் செயலாளரும் வலப்பனை பிரதேசசபை உறுப்பினருமான ச.பன்னீர்ச்செல்வம் உட்பட தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.
கையெழுத்து இயக்கம்
விசாரணை இன்றி நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக இருந்துவரும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் உட்பட சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு இலட்சம் கையெழுத்துகள் பெறும் இயக்கமும் இம் மேதின மேடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.