அம்பாறை திருக்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தங்கள் ஆதரவாளர்கள் ஆயுதக் குழுவொன்றால் மோசமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜே.வி.பி.யினர் நேற்றுக் காலை அம்பாறை நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை மாலை திருக்கோவில் பகுதியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜே.வி.பி.யினர் மீது அங்கு வாகனங்களில் வந்த ஆயுதக் குழுவொன்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், 14 பேர் காயமடைந்தனர்.
தங்கள் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்தே ஜே.வி.பி.யினர் நேற்றுக் காலை 8.30 மணி முதல் 10 மணிவரை அம்பாறை நகரில் மணிக்கூட்டு கோபுரம் முதல் ரீகல் திரையரங்கு வரை ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
இதில் ஜே.வி.பி. எம்.பி.க்களான வசந்த பீரிஸ், நிஹால் கலபதி மற்றும் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்கள் கூறுகையில்;
திருக்கோவில் பகுதியில் எமது உறுப்பினர்கள் மீது பிள்ளையான் குழுவே தாக்குதல் நடத்தியது. ரி.56 ரகத் துப்பாக்கிகள், பிஸ்ரல்கள் சகிதம் வாகனங்களில் வந்த இவர்கள், தங்களைத் தவிர வேறு எவரும் தமிழ் பகுதிகளுக்கு வரக்கூடாதெனக் கூறியே கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்தனர்.