* ஹெல உறுமயவின் மேதானந்த தேரர்
மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு மன்னார் ஆயர் தலைமையிலான 30 மதகுருமார் அடங்கிய குழு விதித்துள்ள நிபந்தனையை ஏற்கக்கூடாதென ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மடு தேவாலயம் முதலில் பௌத்த விகாரையாகவிருந்தது. பின்னர் இந்து ஆலயமானது. அதன் பின்னர் ஒல்லாந்தர்களால் மடு அன்னையின் சிலை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர்.
மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதிகளையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலேயே எமது படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வந்து வைப்பதற்கு மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமாதான வலய பிரகடனமென்பது கேலிக்குரியது. இராணுவமும் புலிகளும் தேவாலயத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இருக்க வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு உணவு வழங்குகின்றது. எனவே, மடுப் பிரதேசத்தில் அம்மக்களை வாழவைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதேவேளை, மலையகத்திலிருந்து வன்னிக்குச் சென்று புலிகளிடம் பயிற்சி பெற்று மலையகத்திற்குள் புகுந்தவர்களை கைது செய்ததும் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள்.
பல இடங்களில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கிய சிங்களவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான தேசத்துரோகிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர்களின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.
பிள்ளையான் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இவ்வாறு பிரபாகரன் வந்தாலும் மகிழ்வடைவோம். கிழக்கில் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் இன வாதத்தைப் பரப்பி வருகின்றார். இது பயங்கரமானது. முஸ்லிம் தாயகத்தை உருவாக்குவேன் எனக்கூறும் ரவூப் ஹக்கீம் இனங்களிடையே மோதல்களை உருவாக்க முனைகிறார்.
இந்நாட்டில் வாழும் இனங்களுக்கு தனித்தனியாக தாயகங்களையும் படையணிகளையும் உருவாக்க அனுமதித்தால் என்ன நடக்குமென்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.