கைத்தொழில் துறை அமைச்சினால் பாதுகாப்புப் படையினருக்காக 61 மில்லியன் ரூபா செலவில், ஹபரணவில் அமைக்கப்பட்டு வந்த இடைத்தங்கல் முகாமின் நிர்மாணப் பணிகள் யாவும் நிறைவுபெற்றதை அடுத்து அது பாதுகாப்பு அமைச்சிடம் உத்தியோகப் பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இராணுவ நலன்புரி மற்றும் கைத்தொழில் துறை அபிவிருத்தி அமைச்சருமான குமார் வெல்கமவினால் இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டிடங்களும் நிலப்பிரதேசமும் அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் சிறிசேனவிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஹபரண திகம்பத்தானவில் விடுமுறையின் பின் வீடுதிரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் 102 பேரின் உயிர்கள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் காவுகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து படையினருக்கான உயர் பாதுகாப்புடன் கூடிய இடைத் தங்கல் முகாமின் அவசியம் உணரப்பட்டது.
வனஜீவ பாதுகாப்புச் சபைக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய இடைத்தங்கல் முகாமின் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் தங்குவதற்கான சகல வசதிகளையும் கொண்ட விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இது கிழக்கு மாகாணத்திற்கு சேவையின் பொருட்டு செல்லும் படையினருக்கு விடுமுறையில் வீடு திரும்பும் படை வீரர்களுக்கும் இவ் இடைத்தங்கல் முகாம் சிறந்த அடிப்படை வசதிகளைக் கொண்ட பாதுகாப்பான முகாமென அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு குருகே, நலன்புரிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி மல்காந்து ஜயவர்தன, மேஜர் ஜெனரல் உபாலி பெரேரா ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தின் போது சமூகமளித்திருந்தனர்.