வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை 5.40 மணியளவில் வவுனியா-கண்டி வீதியில் நீதிமன்றத்திற்கு சமீபமாக நகரசபை மைதானத்திற்கு முன்பாகவே இந்தக் கிளைமோர்த் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மரமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோரே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ ட்ரக் ஒன்றை இலக்கு வைத்தே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் ட்ரக் வண்டிக்கு சிறு சேதமே ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலிருந்து மக்கள் நாலாபுறமும் சிதறியோடியதுடன், அந்தப் பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் உடனடியாக விரைந்து வந்தனர்.
காயமடைந்தவர் உடனடியாக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து அவ்விடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி விசாரணைகளை நடத்தியதுடன் ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணைகளை நடத்தினார்.