ஐ.பி.எல். நடன அழகிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது கலாசார சீர்கேட்டுக்கு வழி வகுக்குமென முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.ரி.உஷா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) சார்பில் `ருவென்ரி-20' தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இத்தொடரில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசும் போது வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்க அழகிகள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மகாராஷ்ராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சட்டசபை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ. க்கள் பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடன அழகிகளின் ஆபாச உடைகளும் ஆட்டங்களும் இந்தியாவில் கலாசார பாதிப்பையும் சீர்கேட்டையும் ஏற்படுத்துமென குற்றஞ்சாட்டப்பட்டது. பார்களில் ஆடப்படும் நடன மங்கைகளை போலவே இவை அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து டில்லி டேர்டெவில்ஸ் அணி தங்கள் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நடன அழகிகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.ரி. உஷா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு துறையில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிக ரசிகர்கள் இருப்பதால் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஐ.பி.எல் நடன அழகிகளை பயன்படுத்தியிருக்கலாம். நமது நாட்டின் பாரம்பரிய தனித்துவம் வாய்ந்தது. பல நூற்றாண்டுகளை கடந்த பண்பாடு மிக்கது. இதை காக்க வேண்டியது நமது கடமை.
காலத்துக்கு ஏற்ப நாமும் நிச்சயம் மாறிக் கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற மோசமான நடனங்கள் தேவையில்லை. அழகிகளின் உடை விஷயத்தில் அதிக கட்டுப் பாடுகள் விதிக்க வேண்டாம். கலாசாரத்துக்கு ஏற்ற வகையிலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் நடன அழகிகளின் உடைகள் அமைய வேண்டுமென்றார்.