ஷ்ரீசாந்த், சாவ்லா பந்துவீச்சில் அசத்த பெங்களூர் ரோயல் சல்ஞ்சர்ஸ் சொந்த மண்ணில் 126 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றியது. இலகுவான இலக்கை சேஸ் செய்த, யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது. டிராவிட்டின் ஆட்டம் வெற்றிக்கு உதவாமல் போனது.
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்), `ருவென்ரி-20' தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ் சர்ஸ் அணி, யுவராஜை கப்டனாகக் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் மோதியது. நாணயசுழற்சியில் வென்ற யுவராஜ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக ஜாபர், விராத் கோஹ்லி வந்தனர். முதல் ஓவரை வீசிய ஷ்ரீசாந்த் வேகத்தில் மிரட்டினார். இதில் திணறிப்போன ஜாபர் `டக்' அவுட்டானார். அடுத்த பந்தில் கேமரூன் ஒயிட்டும் (0) `கிளீன் போல்டாக, ஷ்ரீசாந்த் உற்சாகத்தில் துள்ளினார். இந்நிலையில், கலிஸ் (0) தேவையில்லாமல் ரன் அவுட்டாக, பெங்களூர் அணி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமாக நின்றது.
அடுத்து வந்த டிராவிட், கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மெல்ல உயர்த்தியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 54 ஓட்டங்கள் எடுத்தநிலையில், கோஹ்லி பெவிலியன் திரும்பினார். இவர் 5 பவுண்டரிகள் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார். பொறுப்புடன் விளையாடிய டிராவிட் அரைச்சதம் பதிவு செய்து, அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார்.
மிஸ்பா(8), பிரவின் (0) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஒரு சிக்சர் 9 பவுண்டரி விளாசிய டிராவிட் 51 பந்தில் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கும்ப்ளே (3) ரன் - அவுட்டானார். பெங்களூர் அணி 19.2 ஓவரில் 126 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணி சார்பில் சாவ்லா 3,ஷ்ரீசாந்த் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஹோப்ஸ் (5) விரைவில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சர்வான், மார்சுடன் ஜோடி சேர்ந்தார். சர்வான், ஸ்டைன் பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து அசத்தினார். பின்னர் சகிர் கானின் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இதையடுத்து கப்டன் டிராவிட் பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
பிரவீண் வீசிய 5 ஆவது ஓவரில் சர்வான் ஒரு பவுண்டரி, மார்ஷ் Jரு சிக்ஸர் என அதிரடி காட்டினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தநிலையில், சர்வான், பிரவீன் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த கப்டன் யுவராஜ் (1) இம்முறை சோபிக்கவில்லை. மார்ஷ் 39 ஓட்டங்களுக்கு (ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.