எஸ். கேசவன்
முயற்சி திருவினையாக்கும் என்ற மூத்தோர் திருவாக்கிற்கு ஏற்ப தடைகளைத் தாண்டி, எதிர் நீச்சலிட்டு இன்று `மீண்டும் தொடங்கும் மிடுக்காய்' முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் கொழும்பு இந்துக்கல்லூரி, இரத்மலானையின் வரலாற்றில் அடுத்த அத்தியாயமாக, மிகப் பிரதானமானதொரு நிகழ்வாக புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் அமையவுள்ள இக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கல்லூரி அதிபர் திரு. ந. மன்மதராஜன் தலைமையில் இன்று 08 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அடிக்கல்லை நாட்டிச் சிறப்பிக்கவுள்ளார். கல்லூரியின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வர்.
தலைநகரத் தமிழ் மாணவர்கட்குச் சைவத்தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் கல்வி வழங்க வேண்டுமென உணர்ந்த தமிழ்ப் பெரியார்கள் ஒன்றிணைந்து 1951 ஆம் ஆண்டு மாசி மாதம் 12 ஆம் திகதி இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் பெயரால் பாடசாலையொன்றை ஸ்தாபித்தார்கள். அமரர்கள் கு.மகாதேவன், நீதியரசர் இ. நாகலிங்கம், சேர் ஓ. வைத்தியநாதன், கு. நடேசன் ஆகியோர் இப்பணியில் பெரும்பங்கெடுத்த ஸ்தாபகர்கள் ஆவர். ஆரம்பப் பாடசாலை பம்பலப்பிட்டியிலும் உயர்தரப் பாடசாலை இரத்மலானையிலுமாக மேற்படி பாடசாலை நிறுவப்பட்டது. கொழும்பு இந்துக் கல்லூரி என்ற பெயரோடு இரத்மலானையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பாடசாலையில் `ஏ' வடிவில் ஓர் கட்டிடத்தொகுதியை அமைக்க வேண்டுமென ஸ்தாபகர்கள் கனவு கண்டனர். திட்டமிட்டனர். ஆனால், மேற்படி திட்டத்தின் எழுபத்தைந்து வீதத்தினை மட்டுமே அவர்களால் நிறைவு செய்யமுடிந்தது. மிகுதியான கட்டிடத்திற்கே சுமார் 57 வருடங்களின் பின்னர் தற்போது அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை தனது வரலாறு முழுவதும் தடைகளையும் எதிர்நீச்சல்களையும் கண்டே, முன்னேறி வந்துள்ளது. 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்லூரி வெள்ளி விழாக்கண்டு 1983 ஆம் ஆண்டுவரை மிகச் சிறப்பானதோர் நிலையில் இருந்து வந்தது. 1976 ஆம் ஆண்டில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ அவர்களினால் கல்லூரி பிரதான மண்டபமான சிவகாமி மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் கல்லூரி கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் ஏனைய செயற்பாடுகளிலும் சிறந்திருந்தது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரங்களைத் தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டு கந்தவளை வித்தியாலயத்திற்கும் பின்னர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மாற்றப்பட்டது.
இடம்பெயர்ந்திருந்த பாடசாலையைப் பொறுப்பேற்ற ந. மன்மதராஜன் அவர்களின் காலப்பகுதியில் கல்லூரி மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றது. கல்லூரி மீள இரத்மலானைக்குக் கொண்டுவரப்பட்டு 1999 இல் கற்பக விநாயகருக்குக் கோயில் அமைக்கப்பட்டு, நூலகம், கணினிக் கூடம், ஆங்கில மொழிச் செயற்பாட்டு அறை, போன்றவைகளும் அமைக்கப்பட்டு கல்லூரி முன்னேறி வருகின்றது. அதுமட்டுமன்றி அகில இலங்கை இந்துமா மன்றத்தின் அனுசரணையுடன் ஆதரவற்ற மாணவர்கட்கான விடுதியொன்றும் கல்லூரியில் அமைக்கப்பட்டது.
தலைநகரில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு விடுதியமைத்த முதற் கல்லூரி இதுவாகும். அண்மைக் காலத்தில் கல்வித்துறையிலும் பண்பாட்டுத் நிகழ்வுகளிலும் கல்லூரி பிரகாசித்து வருகிறது. பொறியியல், விஞ்ஞான, கலைப்பீடங்களுக்கு அனுமதி பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் வெளியான புலமைப்பரிசில், க.பொ.த. (சா/த), க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளில் பிலியந்தலை கல்வி வலயத்தில் கல்லூரி முதனிலையில் உள்ளது. அதிகரித்து வரும் மாணவர் தொகைக்கு ஏற்ற வகையில் கட்டிடங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் அதிபரின் அரு முயற்சியாலும் கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உபகாரத்தாலும் தலைநகரத் தமிழரின் ஐம்பதாண்டுக் கனவை நிறைவு செய்யும் விதமாக அமையவுள்ள புதிய கட்டிடத் தொகுதி கல்லூரியை புதிய அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.