* பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு நிகழ்வும் `இலக்கியத் தென்றல்' நூல் வெளியீடும் இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
த.சிவா
ஈழத் தமிழர் வரலாற்றிலே மாண்புடை பேராசானாக வாழ்ந்து பல்துறை வல்லுநர்களை தன் ஆளுமையால் உருவாக்கிய பேரறிஞர். "வித்தி சொல் மிக்க மந்திர மில்லை" என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழ்க் கல்வியாளர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றவர். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் வளர்ச்சிபெற முழுமனதோடு செயற்பட்ட பெருந்தகை.
"இலங்கையில் பண்டைத் தமிழ்ப் பண்புகள் இன்னும் மாறாமல் போற்றப்படுவதற்குக் காரணமாகப் பேராசிரியர் சி.வை.தாமோதரம்பிள்ளை, தமிழ் வித்தகர் ஆறுமுகநாவலர், பேரறிஞர் ஆனந்தக்குமாரசாமி போன்ற பெருமக்களைக் குறிப்பிடலாம். இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க பெருமக்களுள் பேராசிரியர் சு.வித்தியானந்தனும் ஒருவர் என்று கூறுவது மிகையாகாது" என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் சை.வே.சிட்டி பாபு குறிப்பிட்டிருந்தார். "பழமையும் புதுமையும் இணைந்ததொரு நவீன சேதுபந்தனம் தமிழில் உள்ள பழைய இலக்கிய இலக்கணங்களை வரன் முறையிற் படித்தவர்கள். புதிது புதிதாகத் தோன்றும் நவீனங்களையும் படிப்பதில் அவர்கள் தவறுவதில்லை. அவரின் வசனநடைதெளிவும், வசன நடைக்குரிய ஓசை நயமும் வாய்ந்தவை. யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய வசன நடையைப் பேணுபவர்" என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்கள்.
இத்தகைய பெருமைக்குரியவரான பேராசிரியர் சு.வித்தியானந்தன், சுப்பிரமணியம், முத்தம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1924 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் பிறந்தார். அவர் தாம் பிறந்த ஊரான வீமன்காமத்திலுள்ள தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று யூனியன் கல்லூரியில் இடை நிலைக்கல்வியைப் பெற்றார். யாழ்.பரியோவான் கல்லூரியிலும் யாழ்.இந்துக் கல்லூரியிலும் உயர் நிலைக் கல்வியை மேற்கொண்டார். 1941 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வியை மேற்கொண்டு 1944 இல் கலைமாமணிப்பட்டம் பெற்றார். பேராசிரியர் சுவாமி விபுலானந்தர், கலாநிதி க.கணபதிப்பிள்ளை ஆகியோரின் வழிகாட்டலில் 1946 ஆம் ஆண்டு தமிழில் முதுகலைமாணிப்பட்டம் பெற்றார். அதே ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியை ஏற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் பத்துப் பாட்டுப் பற்றிய ஒரு வரலாற்று சமூக, மொழியியல் ஆய்வு' (A HISTORICAL, SOCIAL AND LINGUISTIC STUDY OF PATTUPATTU) என்ற தலைப்பிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1950 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். தமது ஆற்றல்மிகு சேவையினால் 1970 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்றார்.
1977 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் தலைமைப் பணியை ஏற்றார். இவற்றுக்கெல்லாம் அவரின் ஆளுமையே காரணம். யாழ்ப்பாண வளாகம் 1979 இல் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட பொழுது அதன் முதலாவது துணை வேந்தராக நியமனம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகாலத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மேல் அதன் முதன்மை நிர்வாகியாக இருந்த பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தனது மேலான பங்களிப்பை நல்கினார். மருத்துவ பீடத்தினை ஆரம்பித்ததன் மூலம் பல வைத்தியர்களை உருவாக்க முடிந்துள்ளது. மேலும் விவசாயபீடம், எந்திரவியற்பீடம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான பல ஏற்பாடுகளும் இவரது காலத்தில்தான் பூர்த்திசெய்யப்பட்டன. விஞ்ஞான பீடத்தின் இரசாயனத்துறை, கணிதத்துறைக் கட்டிடங்களும் மருத்துவ பீடக் கட்டடங்களும் இவரது சேவைக்காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டுப் பூர்த்திசெய்யப்பட்டன. மேலும் பல்கலைக்கழகத்தின் நூலகம், மாணவர் நிலையம், கலைப்பீடம் ஆகியவற்றுக்குரிய கட்டிடங்கள் இவர் பணியாற்றும் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கணிசமான அளவு பூர்த்திசெய்யப்பட்டன. பேராசானாக இருந்து கொண்டு சிறந்த நிர்வாகியாகச் செயற்பட்ட பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவு கூருமுகமாக பல்கலைக்கழக நூலகத்திற்கு "வித்தியானந்தன் நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவரது பெயரில் பரிசில் வழங்குவதற்காக ஒரு அறக்கொடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"பேராசிரியர் சிறந்த கல்விமானாகவும், ஆசானாகவும், ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சமயத் தொண்டனாகவும், சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றி எமது நாட்டுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகத் திகழ்ந்தார். அவரின் அனுபவமுதிர்வு, அமைதியான பண்பு, மிதமான அஹிம்சைப் போக்கு, ஆழமான நட்புறவு, நிர்வாகத் திறமை என்பன அவர்பால் எனக்குப் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. குழப்பம், குறைபாடுகள் நிறைந்த காலத்தில்தான் பேராசிரியர் சு.வித்தியானந்தன் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏற்று நடத்தினார். காலத்தின் உறுதியின்மையால் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தாக்குப் பிடித்து, பல்கலைக்கழகம் சீர்குலைந்து போகாமல் தனித்துவத்துடனும் நிறுவனக் கட்டுக் கோப்புடனும் காப்பாற்றிய பெருமை அவரது முதன்மையானபணியாகும்" என்று பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் வித்தியானந்தன் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் தலைவராகவும், இலங்கைக் கலைக்கழக நாடகப் பிரிவின் தலைவராகவும் இருந்து அவற்றின் சிறப்பு வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியுள்ளார். "கூத்து மரபை நவீனமயப்படுத்தி அடுத்து வந்த தமிழ் வளர்ச்சிக்கு அதனைக் கட்டளைப்படிவம் ஆக்கியவர். ஈழத்தின் தமிழ்நாடக வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்து ஈழத்தின் தமிழ் பிரக்ஞைச் சுடர்களுள் ஒருவராக விளங்கிய இவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தலை மாணாக்கராக விளங்கியவர். தனது ஆசிரியருடன் இணைந்து ஈழத்து தமிழுலகுக்கு ஒரு புதிய ஆய்வு மாணவர் பரம்பரையைத் தந்தவர்" என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
தலைசிறந்த தமிழ் எழுத்தாளராகிய இவர் சஞ்சிகைகளிலும் வாரப்பத்திரிகை எழுதியுள்ள கட்டுரைகள் இவரின் ஆராய்ச்சித் திறனுக்கும் தெளிவான நடைக்கும் தக்க சான்று பகரும். உலகளாவிய உள்ளமும் உயர்ந்த பயிற்சிப் பண்பும் உன்னத தமிழுணர்வும் வாய்க்கப் பெற்றவர். பழந்தமிழ் இலக்கியங்கள் பால் பெரும் ஈடுபாடு காட்டியவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தந்தவர். அவரது முதலாவது நூல் `இலக்கியத் தென்றல்'. தமிழ் இலக்கண நூல்கள், இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு, ஈழநாட்டுப் பெரியார், தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை முதலியன இவருடைய இலக்கியத் தென்றலிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன. `தமிழர்சால்பு' என்னும் நூலையும் தந்துள்ளார். இவரின் `தமிழியற்சிந்தனை' என்னும் நூல் தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமன்றி தமிழைப் போற்றுகின்ற பிற மொழி அறிஞர்களினதும் மொழியியலாளர்களினதும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் மூலம் தமிழ்மொழியின் பெருமையை உலகெங்கும் முழங்கி வந்த தமிழறிஞர் `தமிழியற்சிந்தனை' யில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் வாயிலாகத் தமிழியலின் நோக்கையும் போக்கையும் பொதுவாகவும், ஈழத்துத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு தொடர்பான பணிகள், சாதனைகள் பற்றிச் சிறப்பாக அறிந்து கொள்ளலாம். இந்நூலிலுள்ள ஒரு கட்டுரையைத் தவிர ஏனையவையாவும் ஈழத்துத் தமிழியல் ஆய்வுடன் சம்பந்தப்பட்டனவேயாகும். இஸ்லாமிய கலாசாரத்தின் சிறப்பை உணர்த்தும் `கலையும் பண்பும்' என்னும் நூல் இவரது ஆய்வு நோக்கை வெளிக்கொணரும் பிறிதொரு நூல்.
பல்கலைக்கழக ஆசிரிய வாழ்க்கைக்கு அப்பால் நாடகத்துறையிலும் பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபாடுகாட்டச் செய்தவர். மாணவர்களின் வளர்ச்சியோடு நெருங்கிய உறவு கொண்ட பேராசிரியர் வித்தியானந்தன் 1946 ஆம் ஆண்டு முதல் 1977 வரை தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஆற்றிய பணிகள் அளப்பரியன. தமிழ்ச்சங்கத்தினூடாக பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களை மேடையேற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் காலப்போக்கில் ஈழத்து நாடக வரலாற்றிலே புதிய பரிமாணங்களை உருவாக்கும் முயற்சிகளில் வெற்றி கண்டார். தமிழ்ச் சங்கம் மேடையேற்றிய பதினாறு நாடகங்களுக்கு உந்துசக்தியா விளங்கினார்.
பேராசிரியரது நாடக வாழ்க்கை தமிழ்ச் சங்கப் பின்னணியில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சிந்தனைச் செறிவோடு உருவாகியது. இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளையைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டில் அதன் தலைமைப் பதவியை ஏற்ற பேராசிரியர் வித்தியானந்தன் இலங்கைத் தமிழ்நாடக வரலாற்று வளர்ச்சியிலும் கிராமியக் கூத்து மறுமலர்ச்சியிலும் ஏற்படுத்திய சாதனைகள் நாடக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க உதவியது.
ஈழத்து நாடக உலகிலே ஏற்பட்டுவந்த மறுமலர்ச்சிப் போக்கோடு பேராசிரியர் வித்தியானந்தனின் நாடக வளர்ச்சிப் போக்கும் அமைந்தது. வடமோடி, தென்மோடிக் கூத்து வடிவத்தையும் அதோடு ஒட்டிய அண்ணாவி மரபையும் நவீன மேடைக்கு ஏற்ற வகையில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றல் வெளிப்பாட்டுடன் `கர்ணன் போர்', `நொண்டிநாடகம்', `இராவணேசன்', `வாலிவதை', ஆகிய நாடகங்களைப் பேராதனையிலும் பின்னர் இலங்கையின் பிரதான நகரங்களிலும் மேடையேற்றி ஈழத்து நாடக வரலாற்றிலே புதியதொரு உந்து சக்தியை ஏற்படுத்தினார்.
நாடகக்கலை பற்றிய ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்து முன்னெடுத்ததுடன் கிராமப்புறக் கலையாக இருந்த கூத்து மரபை பல்கலைக்கழக மட்டத்திற்கு உயர்த்திய பெருமை பேராசிரியர் வித்தியானந்தனையே சாரும். கூத்தாடிகள், அண்ணாவிகள் என்ற நிலைக்கு அப்பால் நாடகக் கலைஞர்களுக்கும், கிராமியக் கலைஞர்களுக்கும் புதியதொரு அந்தஸ்தை உருவாக்க பல ஏற்பாடுகளை மேற்கொண்டார். தரமான நாடகப் பிரதிகள் இல்லாமையை நிறைவு செய்யும் வகையில் தேசிய மட்டத்தில் போட்டிகளை ஏற்பாடு செய்து அவற்றை முன்னின்று நடத்தினார். கிராமியக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் மக்கள் ஆதரவுடன் நாடக விழாக்களையும் கலை விழாக்களையும் ஏற்பாடு செய்து நடாத்தினார். கிராமியக் கலைஞர்களின் பெருமையை மதிக்கும் வகையில் மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அண்ணாவிமார் மகா நாட்டை நடத்தி அவர்களைக் கௌரவித்து நாட்டுக் கூத்துக்கு பெருமை தேடினார்.
கூத்துப் பிரதிகளை அச்சு வாகனம் ஏற்றும் முயற்சியில் முன்னின்று செயற்பட்டார். அலங்காரரூபன் நாடகம், என்றிக் எம்பிரதோர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம், ஞானசௌந்தரி ஆகிய நாடகங்கள் முறையான ஆய்வுமரபிற்கேற்ப பதிப்பிக்கப் பெற்றன. தேசிய கலை மலர்ச்சியினை உருவாக்கும் கலைப்பாலமாக விளங்கியதுடன் ஈழத்தமிழ்மக்களது கலை வரலாற்றிலே புதிய யுகத்தையும் ஏற்படுத்தினார்.
அருட்தந்தை தனிநாயகம் அடிகளார் தமிழ்மொழி ஆராய்ச்சித் துறைகளில் உலகளாவிய பரம்பலில் பெருமை சேர்த்தவர் அவருக்குப் பக்கபலமாக இருந்து தமிழின் பெருமையை மேலோங்கச் செய்தவர் பேராசிரியர் வித்தியானந்தன். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் செயற்பாடுகளிலே செயலாண்மைத் திறன்மிக்க ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். முதல் ஐந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் பங்கு பற்றிய ஒரே இலங்கைத் தமிழர் பேராசிரியர் வித்தியானந்தனே. சர்வதேச மட்டத்தில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய பணியை இலங்கை மட்டத்திலே பேராசிரியர் வித்தியானந்தன் ஆற்றினார். 1974 இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்திய போது எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து வெற்றிகண்டவர். நெஞ்சுறுதியும் நினைத்ததைச் சாதிக்கும் பண்பும் கொண்டு வியக்கத்தக்க முறையிலே தம்பணியை செவ்வனே யாற்றி புகழ் உச்சியை அடைந்தார். பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் மக்கள் மனங்களில் இடம்பிடித்த பேராசிரியர் என்ற வகையில் அவருக்குத் தனிமதிப்புண்டு.
பேராசிரியர் தமது காலத்தில் வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ததுடன் அவர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்ளும் மனிதநேயப் பண்பு மிக்கவராகச் செயற்பட்டார். தன்னுடைய மாணவர்களுக்கோ, நண்பர்களுக்கோ ஏதாவது இன்னல் ஏற்படும் சந்தர்ப்பத்திலே அவர்கள் நாட்டின் எப்பகுதியிலிருந்தாலும் அங்கு சென்று அவர்களுடைய துன்பத்திலே தானும் பங்கெடுத்துக் கொள்வார். மக்கள் மனங்களை வென்ற இப்பண்பாளன் எவர் கடிதம் எழுதினாலும் அதற்கு உடனடியாகவே பதில் எழுதி மகிழ்ச்சியடைவார். பல்கலைக்கழகச் சேவையிலிருந்து இளைப்பாற வேண்டிய 65 வயதை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் 21-01-1989இல் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் நாமம் என்றும் வாழும்.