பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
ஐக்கிய அமெரிக்காவின் இன்றைய பொருளாதார வளத்துக்கு, அங்கு பயிலும் வெளிநாட்டு, மாணவர்கள் முக்கிய `பங்களிப்பைச்' செய்து வருகின்றார்கள். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கான சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு 1450 கோடியாகும். முன்னைய ஆண்டை விட (2005) இது 100 கோடியால் அதிகரித்துள்ளது. அதாவது, வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தமது கல்விக்காகச் செலவிடும் இப்பணம், ஒரு பிரதான வெளிநாட்டுச் செலாவணி வருமானமாக உள்ளது. அமெரிக்காவின் `சேவை' ஏற்றுமதியில் உயர் கல்விச் சேவையானது ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக மதிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் தொகை தற்போது 5,80,000 செப். 11/2001 சம்பவத்துக்குப் பின் அங்கு செல்லும் வெளிநாட்டு மாணவர் தொகை சற்று வீழ்ச்சியடைந்தாலும், தற்போது (2007) இத்தொகை அதிகரித்து வருகின்றது.
மொத்தத்தில் வெளிநாட்டு மாணவர்கள் 2000 கோடியை 2006 - 2007 இல் செலவு செய்துள்ளனர். இதில் 50% கல்விக் கட்டணம், 50% வாழ்க்கைச் செலவு என மதிப்பிடப்படுகின்றது. 65% மாணவர்கள் இதற்கான நிதியைத் தமது சொந்த நாடுகளிலிருந்தே பெறுகின்றனர். ஏனையவர்கள் தமது கல்விக்கான நிதியை அமெரிக்காவிலேயே பெற்றுக் கொள்கின்றனர்.
`உலகில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அடுத்தபடியாக சிறந்த உயர்கல்விக்குத் தட்டுப்பாடு உண்டு; உலகில் இத்தட்டுப்பாட்டைப் போக்கக்கூடிய ஒரே நாடு ஐக்கிய அமெரிக்கா' என்பது அமெரிக்கர்களின் வாதம். அமெரிக்காவில் உள்ள 150 உயர்கல்வி நிறுவனங்களில் 5,80,000 வெளிநாட்டு மாணவர்கள் பயிலுகின்றனர். ஆயினும், அந்நாட்டில் 4000 அங்கீகரிக்கப்பட்ட, வெளிநாட்டு மாணவர்களின் அபிலாஷைகளுக்குப் பொருந்தக்கூடிய உயர்கல்வி நிலையங்கள் உண்டு.
பல ஆண்டுகளாக வெளிநாட்டு மாணவர்களில் 25% மானவர்கள் இந்தியர்களாகவும் சீனர்களாகவும் இருந்தனர். இந்நாடுகளில் உயர்கல்வியில் தேவை அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இவ்விரு நாடுகளின் மாணவர் தொகை அமெரிக்காவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
நாடு, மாணவர்கள்,
1. இந்தியா - 80,466
2. சீனா 62,500
3. ஜப்பான் - 42,215
4. கனடா - 28,140
5. தைவான் - 26,000
7. துருக்கி - 12.500
8. ஜெர்மனி - 8,700
9. பிரிட்டன் - 8,200
10. இந்தோனேசியா - 7,760
ஐக்கிய அமெரிக்காவில் வெளிநாட்டுமாணவர்கள் - 2005
11. பிரேசில் - 7200
12. ஹொங்கொங் - 7200
13. கென்யயா - 6500
14. பாகிஸ்தான் - 6300
15. நைஜீரியா - 6300
அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் உயர்கல்வியை நாடுவோர் தொகையில் சிறுவீழ்ச்சி காணப்பட்டது. சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவுக்கு அப்பால் வேறு நாடுகளிலும் உயர்கல்வி பெற விரும்புவது இதற்கு ஒரு காரணம். அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, இந்தியா முதலிய நாடுகளில் உயர்கல்வி பெறச் செல்வோர் தொகை அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவின் விசா வழங்கும் முறைகளில் காணப்படும் கெடுபிடியும் இதற்கு ஒரு காரணமாகும். 140 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் ஜோர்ஜ்மேசன் பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான வீழ்ச்சி காணப்பட்டது. சில கல்லூரிகளில் இவ்வீழ்ச்சி 24% ஆக உள்ளது. உயர்கல்விக் கட்டணம் அதிகரித்து வரும் ஏனைய நாடுகளுடனான போட்டிகளும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.
ஐரோப்பிய மாணவர்களும் விசா கெடுபிடிகள் காரணமாக பிரிட்டனில் உயர்கல்வி பயில எண்ணுகின்றனர். உதாரணமாக, டென்மார்க் மாணவர்கள் இங்கிலாந்துப் பாட ஏற்பாடு, பரீட்சை முறையும் தமக்கு அதிகம் பிடிப்பதாகக் கூறுகின்றனர்.
அமெரிக்கா பற்றி வெளிநாட்டாரின் பார்வையும் வெளிநாட்டு மாணவர் தொகையும் வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. 9/11 சம்பவத்தின் பின்னர் அமெரிக்காவில்
உலகளாவிய ரீதியில் உயர்கல்வி
பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் (2006)
1. மொத்த வெளிநாட்டு மாணவர்கள் 27,00,000
2. இவர்களில் அமெரிக்காவில் பயின்றவர்கள் 5,80,000 (22%)
3. பிரித்தானியாவில் பயின்றவர்கள் 13%
4. பிரான்ஸில் பயின்றவர்கள் 10%
5. ஜெர்மனியில் பயின்றவர்கள் 09%
6. அவுஸ்திரேலியாவில் பயின்றவர்கள் 04%
7. சீனாவில் பயின்றவர்கள் 06%
8. ஜப்பானில் பயின்றவர்கள் 04%
9. கனடாவில் பயின்றவர்கள் 03%
10. ஏனைய நாடுகளில் பயின்றவர்கள் 27%
உதாரணம் சுவீடன், நோர்வே, டென்மார்க், இந்தியா போன்றன.
ஆதாரம் http://atlas.iienetwork.org
வெளிநாட்டில் பயிலும் மாணவர்
தொகை (2000 - 2005)
ஆண்டு மாணவர் தொகை
1975 6,00,000
2000 18,18,000
2001 18,96,000
2002 21,88,000
2003 24,25,000
2004 25,98,000
2005 27,25,000
2025 எதிர்பார்ப்பு 80,00,000
வாழ்வது ஆபத்தானது எனப் பலர் கருதுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர் தமக்கு முன்பு போல் அமெரிக்காவில் பெரிய வரவேற்பு இருக்காது என்ற எண்ணத்துடன் காணப்படுகின்றனர். இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா (16%) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7%), லெபனான் (6%), ஜோர்டான் (5%), துருக்கி (9%), ஆகிய நாடுகளிலிருந்து வரும் மாணவர் தொகை வீழ்ச்சிகண்டு வருகிறது. (சதவீத வீழ்ச்சி அடைப்புக்குறிக்குள்). ஆயினும், 2007 இற்கான புள்ளிவிபரங்கள் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் மாணவர் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
பிரிட்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வரும் போட்டியின் காரணமாக அமெரிக்கா சில புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. உயர்கல்வியில் தாமே முதன்மையான நாடு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, வெளிநாடுகளில் மாணவர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது. நியூயோர்க் பல்கலைக்கழகம் முதன்முறையாக உயர்மட்ட அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பியுள்ளது. சீனா, ஜேர்மனி, ஐக்கிய அரபு, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் அமெரிக்க ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகம் கூட்டுச் சேர்ந்து, அந்நாடுகளின் மாணவரைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
வெளிநாடுகளில் அமெரிக்க மாணவர்
வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர் தொகையை விடக் குறைந்த தொகையான அமெரிக்க மாணவர்களே வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலுகின்றனர். ஆயினும், தற்போது ஹாவார்ட், யேல் போன்ற பல்கலைக்கழகங்கள் அமெரிக்க மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றன. இவை இவ்வாறான வெளிநாட்டுக் கல்வியை முன்னர் ஊக்குவிக்கவில்லை. மிச்சிக்கன் அரசாங்கப் பல்கலைக்கழகம் 62 நாடுகளில் 230 நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றது, சீனா, ஹொங்கொங், தைவான் ஆகிய நாடுகளில் தனது மாணவர் சென்று படிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2500 மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்றனர். அமெரிக்க மாணவர்கள் பெரும்பாலும் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளையே பெரிதும் நாடுகின்றனர். இவற்றுக்கு அடுத்தபடியாக சீனாவில் 6400 அமெரிக்க மாணவர்கள் கல்வி பயின்றனர். ஆர்ஜென்டீனா, பிரேசில், இந்தியா என்பன அமெரிக்கர்கள் அதிகம் பயிலும் முதல் 20 நாடுகளுக்குள் அடங்குகின்றன.
வெளிநாட்டுக் கல்வி நாடுகளுக்கிடையே இடம்பெறும் கலாசார மற்றும் அறிவுப் பரிமாற்றத்தைக் குறிக்கின்றன. அதேவேளையில் செல்வந்த நாடுகளுக்கான வெளிநாட்டு வருமானத்தின் பிரதான மூலாதாரமாகவும் வெளிநாட்டுக் கல்வி விளங்குகின்றது.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் தமது உயர்கல்வி மாணவர்கள் சர்வதேசப் புரிந்துணர்வைப் பெற வேண்டும்; பிற நாடுகள் பற்றிய அனுபவங்கள் அவர்களுக்குத் தேவை; இதனால், கோளமயப் பொருளாதார முறையில் அவர்களுடைய போட்டித்திறனை வளர்த்துக்கொள்ள முடியும் எனக் கருதுகின்றன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளும் இவ்வாறான நோக்கங்களுக்காகத் தமது மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இவ்வாறான வெளிநாட்டுக் கல்வியைப் பட்டதாரி மாணவர் கல்வியின் ஒரு பகுதியாக அறிவிக்கின்றன.
அமெரிக்க மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக் காரணம் ஒருவகையான கலாசார அனுபவத்தைப் பெறுவதற்கே! கோடை கால விடுமுறையை அனுபவிப்பதற்கு மட்டுமே அவர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். புலமை ரீதியாக அவர்கள் பயனடைவதாகக் கூறமுடியாது. மேலும், அமெரிக்கக் கல்லூரியின் பட்டப்படிப்பின் ஒரு பகுதியே அவர்களுடைய வெளிநாட்டுக் கல்வியும் அனுபவமும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவர்கள் பட்டம் எதுவும் பெறுவதில்லை.
அமெரிக்க மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வி அனுபவத்தில் ஆழமான கல்விப் புலமைப்பயிற்சிக்கு இடமில்லை என்ற முறைப்பாடும் உண்டு.
வளர்முக நாடுகளின் வெளிநாட்டு மாணவர்
அமெரிக்காவிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் வளர்முக நாடுகளிலிருந்து மேலைநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் வேறுபாடு உண்டு. வளர்முக நாடுகளில் உயர்கல்விக்கான தேவை அதிகம். ஆனால், அந்நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் குறைவு. உலகின் உயர்கல்வி மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டில் இவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளற்ற நிலையில் வெளிநாடுகளை நாட வேண்டியுள்ளது.
(உயர்கல்வி வயதெல்லையில் உள்ள மாணவர்களில் (18-24 வயது) 7 சதவீதமானவர்களுக்கே இந்தியாவில் உயர்கல்வி வாய்ப்புகள் உண்டு; இலங்கையில் இச்சதவீதம் 3 மட்டுமே).
வளர்முக நாடுகளில் பல்கலைக்கழக அனுமதியில் உள்ள கட்டுப்பாடுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இல்லை. உள்நாட்டை விட வெளிநாடுகளில் அனுமதி பெறுவது இலகுவானது.
அத்துடன், வடபுல மேலைநாடுகளில் உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் உண்டு. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் 20 இல் 15 அமெரிக்காவில் உண்டு. கேள்விக்கிடமற்ற பாட ஏற்பாடு, பல்வகை விஞ்ஞானக்கல்வி, உலக சந்தை வரவேற்கும் கல்விப் பயிற்சியும் திறன்களும் எனப் பல்வேறு கவர்ச்சி அம்சங்களைக் கொண்டவை அவை.
வளர்முக நாட்டு மாணவர்கள் தாம் விரும்பும் விசேட பாடத்துறைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்துகொள்ள முடியும். (வானவியல், பௌதீகம், விலங்கியலின் பல அம்சங்கள்) உயர்மட்ட மட்டங்களில் (M.Sc, Ph.d) இவ்வாறான கற்கைநெறிகள் வளர்முக நாடுகளில் இல்லை. இருந்தாலும், அவை சர்வதேச ரீதியாகப் போட்டித்தன்மை வாய்ந்தவையுமல்ல.
வளர்முக நாடுகளின் மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வியை நாட, சில அரசியல், சமூகக் காரணிகளும் உண்டு. சில நாடுகளில் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை பாரபட்சமானவை. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட தரப்படுத்தல் கொள்கை, இந்தியாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, மலேசியாவின் பூமிபுத்திரக் கொள்கை என்பவை சில சாராருக்கு உயர்கல்வி அனுமதியில் தடைகளை ஏற்படுத்தின. சில நாடுகளில் காணப்படும் அரசியல் ஒடுக்குமுறைகளும் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகளை நாடக்காரணமாயின.
இலங்கை போன்ற நாடுகளில் பல்கலைக்கழகங்களில் மாணவர் கிளர்ச்சி, படிப்பு நிறுத்தம், ஊழியர் வேலைநிறுத்தம், இதன் காரணமாகப் பல்கலைக்கழகங்கள் மூடப்படல் - இப்பின்புலத்தில் ஏராளமான மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர். இலங்கையின் உயர்கல்வி மாணவர்களில் 10% வெளிநாடுகளில் பயிலுபவர்கள். அமெரிக்காவின் பகட்டான வாழ்க்கை முறை, உலகளாவிய ரீதியில் பரவிவரும் அமெரிக்க கொக்காக்கோலா மற்றும் மக்டொனால்ட் கலாசாரம் என்பனவும் அமெரிக்கப் பல்கலைக்கழகம் தருகின்ற சமூக, பொருளாதார அந்தஸ்தும் வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் (Pull factor) காரணிகளாகும்.
அமெரிக்காவில் கல்வியை முடித்துக்கொண்டு தொழில் வாழ்க்கையையும் தொடங்கும் எண்ணம் பலருக்கு உண்டு. அமெரிக்காவின் பொருளாதாரம் உலகில் பெரியது; வலுவுள்ளது; பல்வகைத் தன்மை (diversified) கொண்டது; தொழில் வாய்ப்புகளை வழங்குவது; அந்நாட்டின் தொழில் அதிபர்கள் திறமைமிக்க வெளிநாட்டவரைப் பெரிதும் விரும்புபவர்கள் பல துறைகளில் சம்பளங்களும் அதிகம். இந்திய மாணவர்களில் 66% - 92% மானவர்களும் சீனர்களில் 77% - 88% மானவர்களும் அமெரிக்காவிலிருந்து திரும்பிச் செல்லவிரும்பாதவர் என மதிப்பீடுகள் கூறுகின்றன.