இலங்கையின் தேர்தல் வரலாறு எத்தகைய விசித்திரமானதெனின் 1982 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றபோது அவரது வாக்கை ஏற்கனவே ஒருவர் கள்ளத்தனமாக பயன்படுத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. உண்மையிலேயே எமது நாட்டில் 1977 வரையில் நடைபெற்ற தேர்தல்கள் மட்டுமே ஓரளவுக்கேனும் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் நடைபெற்றிருக்கின்றன என்பதில் மனத்திருப்தி கொள்ள முடியும். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலானது மிகவும் ஊழல், மோசடியற்றதொரு தேர்தலாகவே காணமுடிகிறது. அன்று ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவிதமான போட்டியும் அத்தேர்தலில் காணப்படவில்லை. காரணம் அன்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக சுதந்திரக் கட்சி ஆட்சி மீது பெரும் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருந்தமையே ஆகும். அந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்தது மட்டுமன்றி அக்கட்சி கூட பாரியளவில் சீர்குலைந்து சின்னாபின்னப்பட்டும் போனது. அரசியல் எதிரிகளுக்கு மோசமான தண்டனை வழங்கி அவர்களை அரசியலிலிருந்தே ஒதுங்கச் செய்யும் ஒரு கோட்பாட்டை அன்று ஜே.ஆர்.ஜயவர்தன பின்பற்றினார்.
இலங்கையில் பலவிதமான தேர்தல்கள் உள்ளன. கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முதல் பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை, மாகாண சபை என்பனவுடன் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் வரை தேர்தல்கள் காணப்படுகின்றன. 1977க்குப் பின்னர் நடைபெற்ற இந்த எல்லாத் தேர்தல்களுமே ஊழலும் மோசடியும் வன்முறைகளும் நிரம்பியனவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில்தான் எதிர்வரும் சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இந்தத் தேர்தலாவது நீதியானதாகவும் நியாயமானதாகவும் நடைபெற வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும். எமது நாட்டை எடுத்துக்கொண்டால் கள்ள வாக்குப் போடுபவர்கள் நிறைந்த நாடாகவும் வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் படுகொலை செய்யும் நாடாகவும் பிரசாரக் கூட்டங்களில் குண்டுத் தாக்குதல், கட்சிக் கொடிகளை வெட்டி எறியும் நாடாகவும் காணப்படுகின்றது. வாக்குப் பெட்டிகளை கடத்துதல், கள்ளவாக்குப் போடவைத்தல் போன்றவற்றை பொறுப்பேற்று நடத்தும் கோஷ்டியினர் கூட தாராளமாகவே காணப்படுகின்றனர்.
அண்மைக் காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட வடமேல் மாகாண சபைத் தேர்தலே மிகவும் மோசமான ஊழல் மோசடி நிறைந்த தேர்தலாகும். 1999 இல் நடந்த இந்தத் தேர்தலின்போது கள்ள வாக்குகள் கட்டுக்கட்டாக போடப்பட்ட படங்கள் கூட ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டன. தேர்தலில் வெற்றியீட்டிய சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெண் ஆதரவாளரை நிர்வாணப்படுத்தி வீதியில் நடனமாடச் செய்த வெறுக்கத்தக்க செயலையும் செய்தார். இறுதியில் அந்தக் குற்றத்துக்காக அந்த வேட்பாளர் (மாகாண சபை உறுப்பினர்) சிறை செல்லும் நிலை கூட ஏற்பட்டது. இவ்வாறான பின்னணியில் சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உண்மையிலேயே கிழக்கு மாகாணம் என்பது கடந்த காலத்தில் யுத்த களமாகக் காணப்பட்ட மண்ணாகும். அங்கு இன்னமும் மக்களின் மன நிலை சீரானதாக்கப்படவில்லை. அச்சமும், பீதியும் கொண்ட நிலையிலேயே மக்கள் காணப்படுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான கட்சிகளும் வெற்றியை தமதாக்கிக் கொள்வதற்காக பிறிதொரு குழுவின் ஆதரவையே நாடியுள்ளன. ஆளுந் தரப்பு ஒரு ஆயுதக் குழுவிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் மக்களின் வாக்குப் பலத்தை இலக்கு வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் களமிறக்கியுள்ளது.
எது எவ்வாறாக உள்ள போதும் வன்முறைகளும் கொலை அச்சுறுத்தல்களும் ஊழலும் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கண்காணிப்புக் குழுக்களின் தகவல்கள் கூட இதனையே நிரூபிக்கின்றன. இந்நிலையில் வாக்களிப்பு நியாயமாகவும் நேர்மையுடனும் நடக்குமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்கப் போவதற்குக் கூட அச்சம் கொண்டிருப்பதாக அறிய வருகின்றது. ஜனநாயக வாக்குரிமை மீண்டுமொரு தடவை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அவை பயன்தருமா என்ற கேள்வி கூட எழுப்பப்படுகின்றது.
நாடு எதிர்பார்ப்பது ஜனநாயகத் தேர்தலையே. சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. இது உண்மையாக நிறைவேறுமா அல்லது 1977க்குப் பின்னரான தேர்தல்களின் வரிசையில் இதுவும் ஒன்று என்று வரலாற்றில் பதியப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.