*தொற்றுநோயால் பல இலட்சம் மக்கள் பாதிப்புறும் அபாயம்
யங்கூன் :மியன்மாரை கடந்த சனிக்கிழமை தாக்கிய சூறாவளி மற்றும் புயலினால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
உலகின் மிக மோசமான அனர்த்தங்களில் ஒன்றாக கருதப்படும் இப் புயல் பல நகரங்களை முற்றாக அழித்துள்ளமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை சரியாக தெரியவில்லை.
இதேவேளை கடும் புயல் தாக்கியதைத் தொடர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியாலும் தொற்றுநோய்களாலும் அவதிப்படும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்கு பணியில் ஈடுபட்டுள்ள உதவி அமைப்புக்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய நர்கிஸ் புயலால் இதுவரை 22500 பேர் பலியாகியிருப்பதுடன் 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சிறுவர்களை கொடிய தொற்றுநோய்களும் பசியும் தாக்கும் அபாயம் அதிகரித்திருப்பதால் அவர்களை உயிர்பிழைக்க வைப்பதற்கான உடனடி உதவிகளை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஐ.நாவின் சிறுவர் அமைப்பான யுனிசெப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஆன்வினிமன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவ ஆட்சியின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கும் மியன்மாருக்குள் மேலதிக உதவி அமைப்புகள் செல்வதற்கு அந்நாட்டு ராணுவ ஆட்சியார்கள் அனுமதி வழங்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உட்பட பல நாடுகளின் அரசாங்கங்களும் உதவி அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் மிக அரிதாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய மியன்மாரின் தகவல்துறை அமைச்சர் கியவ் வற்சன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலுள்ள மக்களும் நலன்விரும்பிகளும் இப்பேரழிவிலிருந்து தாம் மீள்வதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் இவ் அனர்த்த சமயத்தைப் பயன்படுத்தி இலாபம் தேட முயற்சிக்க வேண்டாமென வர்த்தகர்களையும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
உயிர் பிழைத்தவர்கள் மிகக் குறைவான கழிவகற்றல் வசதிகளைக் கொண்டிருப்பதுடன் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கும் யுனிசெப்பின் அறிக்கை மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் வெள்ளத்தினால் பரவும் கொலரா மற்றும் வயிற்றோட்டம் ஆகியவை மிக வேகமாகப் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் மியன்மாரின் பிரதான நகரான ரங்கூனில் உணவு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகியவை நிவாரண முயற்சிகளுக்கான நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ள அதேவேளை தாய்லாந்தும் இந்தியாவும் ஏற்கனவே உணவுப் பொருட்களடங்கிய கப்பல்களை மியன்மாருக்கு அனுப்பி வைத்துள்ளன.
இப் புயலால் மிகக் கடுமையான சேதங்களை சந்தித்த தாழ்நிலப் பிரதேசமான ஐராவட்டி பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இங்கு பாரியளவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இராணுவ ஆட்சியாளர்கள் தமது கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளிநாட்டு நிபுணர்களை மியன்மாருக்குள் அனுமதிக்க வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.