`நர்கீஸ்' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மியன்மார் நாட்டு மக்களுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித போகொல்லாகம தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
மியன்மார் மக்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக் குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யு நியான் வின்னுக்கு அவர் எழுதியுள்ள அனுதாப கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படிருப்பதாவது :-
இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இச் சூறாவளியினால் இடம்பெயர்ந்தும் பாதிக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்கு உங்கள் அரசாங்கமானது உடனடித் தேவைகளை செய்துதவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன்.
புனரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் இப் பேராபத்திலிருந்து மிகக் குறுகிய காலத்தில் மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
இந்த இக்கட்டான வேளையில் அரசாங்கமும் இலங்கை மக்களும் தமது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.