*ஐ.தே.க. பொதுச் செயலாளர் அத்தநாயக்க
இராணுவம் பாரிய இழப்புகளை சந்திப்பதற்கு இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் நடவடிக்கைகள் கலந்திருப்பதே காரணமெனக் குற்றம்சாட்டிய ஐ.தே.க.வின் பொதுச் செயலரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க, இராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் உத்தரவிடக்கூடாதெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியதாவது;
கடந்த மாதத்தில் மட்டும் முப்படையைச் சேர்ந்த 122 பேர் கொல்லப்பட்டும் 926 பேர் காயமடைந்துமுள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் கணக்குக்காட்டும் விடயம் தொடர்பாகவே நாம் ஆராய்வோம். ஆனால் வெளியில் பொதுமக்களிடையே வேறு கணக்குகள் உள்ளன.
படையினர் நாட்டின் இறைமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அவர்களை கௌரவிக்கின்றோம். அவர்களின் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்போம்.
முகமாலையில் இராணுவம் பின்னடைவை எதிர்கொண்டது. இது முதல் தடவையல்ல. பல தடவைகள் நடந்துள்ளன. படையினர் பின்னடைவை எதிர்கொள்ள அரசியல் நடவடிக்கைகளே காரணம்.
அவசரகால சட்டத்தை வைத்துக்கொண்டே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடமாட்டோமென்று நினைத்தே அரசு மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
கிழக்கில் புலிகள் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட கிழக்கில் சட்டவிரோதக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றன. இவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையான் குழுவின் துப்பாக்கி கலாசாரத்தை அரசு நிறுத்தவேண்டும்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்த அரசு விரும்பினால் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். கிழக்கில் 200 க்கு மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. ஆனால் பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் பிடிபடுவதில்லை.
கிழக்கில் இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே பிள்ளையான் குழுவின் முகாம்கள் உள்ளன. அங்கே ஆயுதங்களுடன் அவர்கள் நடமாடுகின்றனர். இதனை நான் கண்ணால் கண்டேன். எந்த நாட்டில் இவ்வாறான நடைமுறை உள்ளது. அரச படையினர் முகாம்களுக்கு அருகில் சட்டவிரோத ஆயுதக்குழுவின் முகாம் இலங்கையில் மட்டுமே உள்ளது.
ஏறாவூர், கிரான். வாழைச்சேனை, செங்கலடி சந்தியென சகல இடங்களிலும் அரச படையினர்களின் முகாம்களுக்கு அருகிலேயே பிள்ளையானின் முகாம்கள் உள்ளன. கொக்கடி, தொப்பிகல, திருகோணமலை தபால் நிலையத்துக்கு அருகிலென சகல இடங்களிலும் பிள்ளையானின் முகாம்கள் உள்ளன.
கிழக்கில் இராணுவமுகாம்களுக்கருகில் பிள்ளையானின் முகாம்கள் இருப்பது சகல மக்களுக்கும் தெரியும். ஆனால் அரசுக்கு மட்டும் தெரியாது. இதுதான் விந்தையானது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கும் திராணி அரசுக்கு இருக்கவேண்டும். அது இல்லாததாலேயே அரசு அங்கு சட்டவிரோத செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. மிரட்டல்கள், தாக்குதல்கள் என கிழக்கில் அராஜகங்கள் அரங்கேறுகின்றன. பிள்ளையானை வைத்துக்கொண்டு அரசுதான் இவற்றை செய்கின்றது.
ஐ.தே.க.வுக்கும் புலிகளுக்கும் கூட்டு எனக்கூறிக்கொண்டு புலிகளோடு அரசே கூட்டுச்சேர்ந்து செயற்படுகின்றது. கிழக்கில் வெளியிடப்படும் தேர்தல் துண்டுப் பிரசுரங்களில் ஒருபக்கம் அரச இலட்சினையும் மறுபக்கத்தில் புலிகளின் இலட்சினையும் காணப்படுகின்றது. பிள்ளையானுக்கு முன் அரசு மண்டியிட்டு நிற்கிறது.
வடமேல் மாகாணசபைத் தேர்தல் ஒரு படுமோசமான தேர்தல். அதேபோன்றுதான் கிழக்கில் தற்போது நடைபெறத் தொடங்கியுள்ளது. பிள்ளையான் குழுவிடம் ஆயுதங்கள் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறி, முடிந்தால் நிரூபியுங்கள் என்றும் சவால்விட்டார்.
துப்பாக்கிதாரிகளை படம்பிடித்தால் படம் பிடித்தவரின் தலை இருக்காது. ஆனாலும் நான் எனது தலையைப்பற்றிக் கவலைப்படாது சில புகைப் படங்களை எடுத்துள்ளேன். இதோ இந்தப்படங்களில் பிள்ளையான் ஆயுதத்துடன் இருக்கிறார். அவரின் முகாம்கள், அங்குள்ளவர்கள் ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள். இதற்கு அரசு என்ன சொல்லப்போகிறது.