*ரவி கருணாநாயக்க கூறுகிறார்
கோதபாய ராஜபக்ஷவை தலைவராகக் கொண்ட மிகின் விமான சேவை நிறுவனம் 3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் அல்லல்படுவதாலேயே அதன் சேவை்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மிகின் விமான சேவை தொடர்பாக ரவி கருணாநாயக்க விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். அமைச்சருக்கு பதிலாக சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா பதில் அளித்தார்.
இது தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில், "மிகின் விமான சேவை நிறுவனம் 625 மில்லியன் ரூபாவை முதலிடவுள்ளது. இந்நிறுவனத்தில் 300 பங்குகள் உள்ளன. 2 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் சேவைகள் டுபாய், திருச்சி, திருவனந்தபுரம், புத்தகாயா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு நடத்தப்படுகின்றன" என்றார்.
அமைச்சரின் பதிலில் திருப்தியடையாத ரவி கருணாநாயக்க எம்.பி., "மிகின் விமான சேவை நிறுவனம் 3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் அல்லல்படுகின்றது. விமான சேவையினால் நிறுவனம் பாரிய நஷ்டமடைந்துள்ளது. மக்கள் பஸ்ஸுக்கு வழியில்லாமல் இருக்கும்போது இவர்கள் மக்கள் பணத்தில் எயார் பஸ்களை வாங்கி பணத்தை அழிக்கின்றனர்.
சஜித் வாஸ் குணவர்த்தன என்பவர் எங்கேயுள்ளார் என்று கூடத் தெரியாது. அவர்தான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பு" என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க "மிகின் விமான சேவை நிறுவனத்திடம் இரு விமானங்களே நின்றன. அவை இரண்டையும் தற்போது உரிமையாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். தற்போது மிகின் விமான சேவை நிறுவனத்திடம் விமானங்கள் இல்லை. ஆனால், விமானக் கம்பனி மட்டும் உள்ளது.
மிகின் விமான சேவை நிறுவனத்தின் எரிபொருள் அமைச்சுக்கு 883 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் பௌஸி கூட பல தடவைகள் இச்சபையில் தெரியப்படுத்தியுள்ளார்" என்றார்.
`மிகின் விமான சேவை' நிறுவனம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவும் அநுர குமார திஸாநாயக்கவும் பல கேள்விகளை தொடர்ந்து கேட்டபோது, தான் விமான சேவைகள் அமைச்சர் இல்லை என்பதால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாதெனவும் பின்னர் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் இது குறித்த பதில்களை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.