*இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு எதுவுமில்லையா? மனோ கேள்வி
சமாதான வலயங்களை உருவாக்க மறுத்து வரும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதிலேயே முனைப்புக் காட்டி வருவதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த மனோகணேசன் மேலும் கூறியதாவது,
மடுமாதா தேவாலயம் குறித்து மன்னார் ஆயரின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தல்ல, அதுஒரு சமூகத்தின் கருத்து. அதனை உதாசீனப்படுத்த முடியாது. ஆனால், அதனை ஏற்கக் கூடாதென ஹெலஉறுமய கூறுகின்றது.
மன்னார் ஆயர் அரசுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கவில்லை. புலிகளுக்கும் நிபந்தனை விதித்துள்ளார். அரசு இதனை ஏற்றால் புலிகளும் அதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இதன்மூலம் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.
மடுமாதா கோயில் பௌத்தரின் இடம். திருகோணமலை கோணேஸ்வரம் பௌத்தரின் இடம். கீரிமலை நகுலேஸ்வரம் பௌத்தரின் இடம். இதுதான் ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம். அவ்வாறானால் இந்து. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்டில் எந்த இடமும் சொந்தமில்லையா?
தற்போது அரசாங்கத்தை ஹெலஉறுமயவே பொறுப்பெடுத்துள்ளது. அந்த நிலையில்தான் அது செயற்பட்டு வருகின்றது. சில விடயங்களில் அரசை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கின்றனர்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் படையணி தொடர்பாக பேசியது குறித்து ஹெலஉறுமய எம்.பி. கடுமையாகப் பேசினார். ஹக்கீம் பேசினால் எந்நத் தவறும் இல்லை. இந்தியாவில் சகல இனத்திலும் படையணிகள் உண்டு. அவை அனைத்தும் இந்திய இராணுவத்தில்தான் உண்டு. அவ்வாறு ஏன் இங்கு செய்யமுடியாது?
ஹெலஉறுமய போன்ற தீவிரவாத கட்சிகள் அரசாங்கத்தை எங்கேயோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாதை அபாயகரமானது. அதில் தொடர்ந்து பயணிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
கிழக்கு மாகாணத்தில் நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அரசு தோற்கடிக்கப்படவேண்டும். ஏனெனில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட திட்டத்தை முன்னெடுக்க அரசு முற்படுகிறது. அதனால் அரசு தோற்கடிக்கப் படவேண்டியது அவசியம்.