*நௌசாட் எம்.பி.வலியுறுத்தல்
அரச படைகளில் ஆட்சேர்ப்பின்போது சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டதன் காரணமாகவே அம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியேற்பட்டதென முஹம்மட் நௌசாட் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
1972 ஆம் ஆண்டு நான் அரசபடையில் இணைவதற்காக விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு சென்றிருந்தபோது, நான் முஸ்லிம் என்ற காரணத்தினால் இணைத்துக்கொள்ளவில்லை. தப்பித்தவறி இணைந்திருந்தால் நான் இன்று ஒரு பிரிகேடியராக இருந்திருப்பேன். சில வேளைகளில் உயிரிழந்திருப்பேன்.
ஆனால், அப்போது தமிழ், முஸ்லிம் மக்களை அரச படைகளில் இணைத்திருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகள், போராட்டங்கள் தோன்றியிருக்காது.
கிழக்கில் இடம்பெறும் அரச தரப்பு தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு வெளி இடங்களிலிருந்து ஆட்களை வாகனங்களில் அழைத்துவருகின்றனர். ஏனெனில், அங்கு அரச பிரசாரக் கூட்டங்களில் கதிரைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கிழக்கில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் வடக்கின் நிலை மீண்டும் கிழக்கில் ஏற்படும் நிலைதான்வரும். படையினரால் கிழக்கு விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் சோதனைச்சாவடிகளே காணப்படுகின்றன.
கிழக்கில் இயங்கும் பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்திக் கேட்கிறேன். ஏனெனில், இந்த ஆயுதக்குழுவின் செயற்பாடுகளினால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
எனவே, இது தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும்.