*ஜே.வி.பி. எம்.பி.அநுரகுமார கூறுகிறார்
யாழ்.மாவட்ட சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகளே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்ட ஜே.வி.பி. எம்.பி அநுரகுமார திசாநாயக்கா, கிழக்குத் தேர்தலிலும் மோசடிகள் தொடர்ந்தால் அது மற்றுமொரு ஆயுதக் குழுவின் ஆரம்பத்திற்கு வழிவகுக்குமெனவும் எச்சரிக்கைவிடுத்தார்.
பாரளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகளை அரசாங்கம் தனது வெறிபிடித்த குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்துவது பாரதூரமான விளைவுகளை தோற்றுவிக்குமென ஜே.வி.பி. எச்சரிக்க விரும்புகிறது.
புலிகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் ஜனநாயகத்தை நுகருவதற்கு உரிமை பெற்றுள்ளனர். ஆனால், மோசடி மூலம் அம்மக்கள் நம்பிக்கையை அபகரிக்க அரசாங்கம் முயலுகிறது. கிழக்குத் தேர்தல் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாக இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆயுதக் குழுவொன்றுடன் கூட்டுச் சேர்ந்தமை மிகப் பெரும் தவறு. அம்மாகாண மக்கள் தேர்தலை கோரவில்லை. இதனால் அங்கு தேர்தல் சூடுபிடிக்கவில்லை. ஆயுதக்குழுவுடன் கூட்டுச் சேர்ந்தமையே மக்களின் அதிருப்திக்குக் காரணமாகும். இதனால் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்பார்கள். இந்த நம்பிக்கை இழப்பானது மற்றுமொரு ஆயுதக்குழுவின் ஆரம்பத்திற்கே வழிவகுக்கும்.
1981இல் யாழ்.குடா நாட்டில் நடைபெற்ற தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கவழிவகுத்தது.
கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்டே தேர்தல் நடத்தப்படுகிறது.
அங்கு மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துங்களென வலியுறுத்துகிறோம். ஆனால் எமது வலியுறுத்தல் செவிமடுக்கப்படவில்லை.
அரசாங்கம் ஜனநாயகத்திற்கு பயந்து நடுங்குகிறது. அரசின் தலைவர் ஜனநாயகத்திற்கு அஞ்சி செயற்படுகிறார். பயங்கரவாதம் பற்றிய பீதியை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து தேர்தலில் வெற்றிபெற அரசு முயற்சிக்கிறது. எனவே தயவுசெய்து இந்த அராஜகங்களை நிறுத்துங்களென வலியுறுத்துகிறோம்.