*தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் அய்யாத்துரை
`உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற தத்துவத்தை முன்னெடுத்து கிளர்த்தெழுந்து போராடி உரிமைகளை பெற்ற தினமே மே தினம். இந்த மே தினத்தைக் கொண்டாடும் மலையக அரசியல் தலைமைகள் தொழிலாளர் பலத்தையும் சக்தியையும் அதிகார வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் அடிமைப்படுத்தி விட்டும் கொண்டாடுவது தொழிலாளர்களின் உரிமைக் குரலை மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கையாகும், என தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை நானுஓயா நகரில் நடைபெற்ற தொழிலாளர் விடுதலை முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி இணைந்து நடத்திய மே தின விழாவின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; உலக தொழிலாளர் வர்க்கம், அதிகார வர்க்கத்திடமிருந்தும் முதலாளி வர்க்கத்திடமிருந்தும் உரிமைகளை பெறுவதற்காக போராடிய போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் மே தினத்தின் எதிர்கால உரிமைக்கும் போராட்டத்திற்கும் திடசங்கற்பம் பூணும் நாளாகும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு 200 ஆண்டுகள் தங்களுடைய உழைப்பு மூலமாக உற்பத்தியை வருவாயை பெருக்கிக் கொடுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாட்கூலி முறையில் இருப்பது தொழிலாளர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமமானதாகும்.
நாட்கூலி முறையிலான கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளதால் இன்றைய வாழ்க்கை செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளில் வாழ்கின்ற தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு இந்த கூட்டு ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆகவே, தான் இந்த கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தைக் கோருகிறோம்.
தொழிலாளர்களை அரசாங்கத்திற்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அடகுவைத்து மே தினத்தைக் கொண்டாடும் நிலைமை பெருந்தோட்டத் தொழிற் தலைமைகளுக்கு கை வந்தகலையாகி விட்டது. இந்நிலையிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமானால் இவர்கள் உண்மையை உணர்ந்து ஒற்றுமையாக உரிமைக் குரல் கொடுக்க தயாராக வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்யப்பட்ட அனைத்து கூட்டு ஒப்பந்தங்களும் தொழிலாளர்களுக்கு எதிரானவையாகவே இருந்தது என்பதை வரலாறு மறைக்க முடியாது.
1967 ஆம் ஆண்டு இ.தொ.கா.வும் தோட்ட முதலாளிமார்களும் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுடைய சேவைக் காலப் பணத்திற்கு முடிவு கட்டியது. அன்று அதனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதாலேயே இன்று தொழிலாளர்கள் சேவைக் காலப் பணத்தையும் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியினையும் பெறுவதற்கு வழி ஏற்பட்டது.
ஆகவே, தொழிலாளர்களுடைய உரிமைகளை மட்டுமல்ல சம்பள உயர்வு, ஏனைய சலுகைகளை பெற வேண்டுமானால் அதிகார வர்க்கத்திற்கும் அவசர காலச் சட்டத்திற்கு கை தூக்கி அரசியல் நடத்தும் கேடு கெட்ட நிலைமைக்கு முடிவு கட்ட தொழிலாளர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.