சிவனொளிபாதமலை உச்சியிலுள்ள ஆலயத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டு வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை உச்சியிலுள்ள சமன் தேவாலயத்தின் குத்துவிளக்கின் அடியிலிருந்த குண்டே பொதுமக்களால் கண்டு பிடிக்கப்பட்டு பின்னர் வெடிக்க வைக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நண்பகல் 11.30 மணியளவில் ஆலயத்தில் நின்ற மக்கள் அங்கிருந்த குத்து விளக்கின் கீழ் ஏதோவொரு பொருள் இருப்பதைக் கண்டு அங்குள்ள பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் குத்து விளக்கின் கீழிருந்து குண்டொன்றைக் கண்டெடுத்து பின்னர் அங்கு இராணுவ வெடி குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரை வரவழைத்து வேறொரிடத்தில் குண்டை வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்துள்ளனர்.
இதனால், எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், சிவனொளிபாதமலை மீது இந்தக் குண்டு எப்படி வந்ததென்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.