*படையினர் தேடுதல்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு கைக்குண்டொன்று வெடித்ததையடுத்து அப்பகுதியில் படையினர் தேடுதலை நடத்தியுள்ளனர்.
யாழ்.பிறவுண் வீதியிலுள்ள மாணவர் விடுதிக்கு வெளியிலேயே நேற்றிரவு 7 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது கைக்குண்டொன்று வெடித்துள்ளது.
இதையடுத்து அவ்விடத்துக்கு வந்த படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்ததுடன், மோப்ப நாய்களுடன் மாணவர் விடுதிக்குள் நுழைந்து தேடுதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், இந்தச் சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கன், வணிக பீடாதிபதி எஸ்.தேவராஜா மற்றும் சிரேஷ்ட வார்டன் எஸ்.விசாகரூபன் ஆகியோர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர்.
அவ்வேளையில் அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், அப்பகுதியில் எவரும் செல்ல அனுமதிக்கவில்லை.
இதேநேரம், அங்கு சென்ற துணைவேந்தரையும் ஏனைய இருவரையும் மாணவர் விடுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்த படையினர், மாணவர் விடுதிப் பக்கமிருந்து இரு கைக்குண்டுகள் வெளியே வீசப்பட்டதாகவும் அதிலொன்று வெடித்ததுடன், மற்றையது வெடிக்கவில்லையெனவும் கூறியுள்ளனர்.
அத்துடன், மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்ட பின்னரே துணைவேந்தரையும் மற்றைய இருவரையும் உள்ளே செல்ல அனுமதித்ததுடன், அவர்களுடன் படையினரும் மோப்பநாய்கள் சகிதம் சென்றுள்ளனர்.
எனினும் துணைவேந்தரும் மற்றைய இருவரும் மாணவர் விடுதிக்குள் செல்ல படையினர் அனுமதிக்காததால், உண்மையில் அங்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை.
இதேநேரம், சம்பவம் நடந்தபோது உணவைப் பெற்றுவரச்சென்று வெளியே நின்ற ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் உள்ளே வருவதற்கான அனுமதியையும் துணைவேந்தர் படையினரிடம் பெற்றுக்கொடுத்தார்.