ரொஷான் நாகலிங்கம்
ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச அணியினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவ்வணியினருக்குள் திடீரென ஏற்பட்ட முரண்பாட்டினால் பெரும் களேபர நிலையேற்பட்டதுடன், ஊடகவியலாளர் மாநாடும் இடை நடுவில் குழப்பியடிக்கப்பட்டது.
விமல் வீரவன்ச அணியினரின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை காலை கொழும்பு தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இம்மாநாட்டின் போது உரையாற்றிய சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் பிரயஞ்சித் விதானகே, மேல்மாகாண சபை உறுப்பினர் பியந்த வெல்கம ஆகியோர் ஜே.வி.பி. தொடர்பாக கடுமையான கருத்துகளைக் கூறி காரசாரமாக உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய மெதகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் லெப்பை மேற்குறிப்பிட்ட இருவரின் கருத்துகளையும் கண்டித்து அவர்களுக்கு எதிராக உரையாற்றினார்.
இதையடுத்து இரு தரப்புக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு களேபர நிலையுண்டானது. இதனால், ஊடகவியலாளர்கள் மாநாடு இடை நடுவில் குழப்பத்துடன் முடிவடைந்தது.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த மெதகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் லெப்பை, மொனராகலை ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த அழைத்ததன் பேரிலேயே நான் இந்தக் கூட்டத்துக்கு வந்தேன்.
இங்கு வந்த பின்னர் தான் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் உண்மைத்தன்மை தெரிந்தது. இவர்கள் கூறுவது போல் ஜே.வி.பி.க்குள் எந்தப் பிளவும் இல்லை. இந்த உறுப்பினர்கள் பொய்களைக் கூறியதாலேயே இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டது என்றார்.