இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக கடந்த 24 ஆம் திகதி வைத்தியருடன் பிரச்சினையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தாதியான நிஷான்த லேகம்கேயை கேகாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதற்கு எதிராக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இரத்தினபுரி வைத்தியசாலை தாதிமார்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த அசாதாரணமான இடமாற்றத்தை நீக்குமாறும் இடமாற்றம் செய்வதனால் சம்பந்தப்பட்ட இருவரையும் இடமாற்றம் செய்யும்படியும் வைத்தியசாலை மூடப்பட்டது தொடர்பில் ஒரு நடுநிலையான விசாரணையை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியுமே மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இரத்தினபுரி தாதிமார்களின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைத்தியசாலை நிலைமைகளை வழமைக்குக் கொண்டு வரும்படியும் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் சுகாதார செயற்குழுக்கள் தொடர்பான நடுநிலையான நிலைப்பாடுகள் காணப்படாமையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஒருவரால் தாதி மாணவியொருவருக்கு பலவந்தமாக ஊசி ஏற்றியதற்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படாததையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன் போராட்டத்துக்கு மத்தியிலும் அவசர சேவைகளில் தாம் ஈடுபடுவோமெனவும் தெரிவித்தார்.