*ஜே.வி.பி. கண்டனம்
ரொஷான் நாகலிங்கம்
ஜனாதிபதி ஜனநாயகத்தை மதியாது நாட்டில் தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு முற்படுவதாக ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம்சாட்டியதுடன், அரசின் தேவைகளுக்காகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
ஜே.வி.பி.நேற்று புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
ஜனாதிபதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். இதேவேலையை அவர் கடந்த மாதமும் மேற்கொண்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் அதனைச் செய்வது ஜனநாயக விரோத செயலாகும்.
அதாவது கடந்த மாதம் இருநாள் பாராளுமன்றம் கூடிய நிலையில் ஒத்திவைக்கப்பட்டதுடன் இம்முறை ஒரு நாள் கூடிய பின் ஒத்திவைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கே பாரளுமன்றம் கூடுகின்றது. அவ்வாறான நிலையில் இச் செயற்பாட்டை ஜனாதிபதி தொடர்ச்சியாக மேற்கொள்வதை ஏற்க முடியாது.
அரசாங்கம் மேற்கொள்ளும் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகம் விரோத செயல்குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதிலிருந்து தப்புவதற்கு இது உதவும்.
கிழக்கில் எமது கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது தாக்கப்படுகின்றனர். அதுபோல் தேர்தல் பிரசார அலுவலகங்களும் எரிக்கப்பட்டும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக விரோத செயல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க இருந்தோம். அது போல் மிகின் ஏயார் 3200 மில்லியன் நட்டமடைந்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்தும் விவாதிக்கவிருந்த சமயம் அதிலிருந்து தப்புவதற்காகவே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அவசரகாலச் சட்டம் மாதா மாதம் நீடிக்கப்படுகின்றதன் காரணமாகவே ஓரிரு நாள் பாராளுமன்றம் கூடிய பின் ஒத்திவைக்கப்படுகின்றது. இவ்வாறு ஜனாதிபதி தமது தேவைக்கு ஏற்ப பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் ஒத்திவைப்பதும் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.
ஜனாதிபதி மகிந்த சிந்தனையில் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தெரிவித்துள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாரும் கேள்விகேட்க முடியாதவாறு சர்வாதிகார ஆட்சி நடத்த முற்படுகின்றார். இதற்கெரதிராக நாம் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார்.