*புலிகள் தெரிவிப்பு
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சியில் இராணுவ கவச வாகனமொன்று கண்ணிவெடியில் சிக்கியதில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கறுக்காய்குளம் பகுதியிலிருந்து பலத்த ஷெல் தாக்குதலுடனும் மோட்டார் தாக்குதலுடனும் பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பாரிய படை நகர்வுக்கெதிராக விடு தலைப்புலிகள் கடும் பதில் தாக்குதலை நடத்தினர். இதன்போது, படையினரின் கவசப் படையணிகளும் கடும் தாக்குதலை தொடுத்தன.
இதையடுத்து, கடும் மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பும் நீண்டநேரம் கடும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், துருப்புக்களுடன் சென்ற கவச வாகனமொன்றின் மீது விடுதலைப்புலிகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியதில் அந்தக் கவச வாகனம் சிக்கி சிதறியதுடன், அதில் சென்ற ஒன்பது பேரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து படையினர் பலத்த ஷெல் தாக்குதலுடன் வேட்டையா முறிப்பு பகுதியை நோக்கி முன்னகர்வு முயற்சியொன்றை மேற்கொண்டனர்.
அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த முன்னகர்வுக்கெதிராக புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். நண்பகல் வரை இங்கும் கடும் மோதல் நடைபெற்ற நிலையில் இரு பகுதி முன்னகர்வு முயற்சியும் தடுத்துநிறுத்தப்பட படையினர் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கி பழைய இடங்களுக்குச் சென்றதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.