எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் என வர்ணிக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) ஆதரித்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹெலிகொப்டர் விமானம் மூலம் வீசப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட பிள்ளையானை வெல்ல வைப்பதற்காக அரசாங்கம் மும்முரமான பிரசாரப் பணியை மேற்கொண்டு வருகின்றது.
அரசாங்கம் பெரும் பணச் செலவில் பிள்ளையான் படத்துடன் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்குக் கொண்டு சென்று நேற்று முன்தினமும் நேற்று புதன்கிழமையும் ஆகாயத்திலிருந்து மாவட்டம் முழுவதும் வீசியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு கிழக்கில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல முதலில் ஹெலிகொப்டர் வழங்க மறுத்த அரசு பின்னர் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத ஹெலியை வழங்கியது. ஆனால், ஒரு ஆயுதக் குழுவின் தலைவனுக்காக தாராளமாக ஹெலியைப் பாவித்துள்ளது. இதுதான் அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவுடன் பிரசாரப் பணிகள் முடிவுக்கு வந்த போதிலும் இன்று காலையிலும் துண்டுப் பிரசுரங்களை விமான மூலம் வீசுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.