சூறாவளி அநர்த்தத்தால் மியன்மார் மோசமாகப் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டிடமிருந்து உடன்படிக்கை செய்துகொண்டதன் பிரகாரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் அதேவேளை, அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் மற்றொரு தென்கிழக்காசிய நாடான தாய்லாந்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் கொழும்பு ஈடுபட்டுள்ளது.
50 ஆயிரம் தொன் அரிசியை தாய்லாந்திலிருந்து பெறுவதற்கு இலங்கை பேச்சு நடத்துவதாக தாய்லாந்து அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, மியன்மாரில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலமையால் இலங்கையில் அரிசி விநியோகத்திற்கு தடங்கல் ஏற்படுமென்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
`மியன்மாரிலிருந்து 1 இலட்சம் தொன் அரிசியைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். ஏற்கனவே, 20 ஆயிரம் தொன் அரிசியைப் பெற்றுள்ளோம். ஆனால், மீதி 80 ஆயிரம் தொன் அரிசியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக நிச்சயமற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், நர்கீஸ் சூறாவளியால் அந்நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் பி.ரி.ஐ. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உணவு நெருக்கடியை அடுத்து இலங்கைக்கு அரிசியை விநியோகிப்பதை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நிறுத்திவிட்டன. ஆயினும், உள்நாட்டில் அரிசி விநியோகத்தை இலங்கை சமாளித்துவருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சாமி பி.ரி.ஐக்குக் கூறியுள்ளார்.
ஜூலை வரை உள்நாட்டு அரிசி விநியோகத்தை சமாளிக்கக்கூடியதாக இருக்கும். செப்டெம்பரின் பின் சிறுபோக அறுவடை கிடைக்கும். அதற்கிடைப்பட்ட சிறிது காலப் பகுதியில் தான் நிச்சயமற்ற நிலமை காணப்படுகின்றது என்றும் எஸ்.பி.சாமி கூறியுள்ளானர். இதேவேளை, அரிசிக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளதையடுத்து சில்லறைக் கடைகளில் தரம் குறைந்த அரிசியே இந்த உத்தரவாத விலைக்கு விற்பனை செய்வதைக் காண முடிகிறது.
தரமான அரிசி அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.