எம்.ஏ.எம்.நிலாம்
திங்கட்கிழமை கிழக்கிலிருந்து கொழும்புக்கு ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் மேலும் 10 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்திருந்தால் வெடித்துச் சிதறியிருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் திங்கள் மாலை ரணில் விக்கிரமசிங்க சம்மாந்துறையிலிருந்து ஹெலிகொப்டர் விமானம் மூலம் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த "ஹெலி" மகியங்கனைப் பகுதியில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு உடனடியாக மகியங்கனை விளையாட்டு மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில் பிறிதொரு "ஹெலி" கொழும்பிலிருந்து சென்று ரணிலை ஏற்றிவந்தது. இதனிடையே மேற்படி ஹெலியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுக்குக் காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஹெலி உடனடியாக தரையிறக்கப்படாமல் இன்னும் 10 நிமிடங்கள் ஆகாயத்தில் சஞ்சரித்திருந்தால் வெடித்துச் சிதறியிருக்க முடியுமென தன்னை அடையாளம் காட்டவிரும்பாத விமானப்படை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த ஹெலியில் ஏற்பட்ட அதிர்வுக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
ஹெலியின் விமானமோட்டியின் சாதுரியமான முன்யோசனையால் எதிர்க் கட்சித் தலைவரின் உயிர் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கம் வேண்டாவெறுப்புடன் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத ஹெலிகொப்டரை வழங்கியிருப்பதாக தமக்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.