*சாடுகிறது தமிழ் கூட்டமைப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம்கொடுக்க அஞ்சியே அரசாங்கம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப்போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதை தடுப்பதற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பதும் அரசுக்கு நன்கு தெரியும். அதனால், தோல்வியடைந்த பின்னர் எமது முகங்களில் முழிக்க முடியாத அவமானத்தை சிறிது நாளுக்காவது தவிர்ப்பதற்காகவும் பாராளுமன்றத்தை அரசு ஒத்திவைத்துள்ளது.
எனவே, கிழக்கு மாகாண சபை தேர்தலில் மோசடி செய்வதற்காகவும் அங்கு அடையப்போகும் தோல்விக்கு அஞ்சியுமே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.