*அரசாங்கம் தெரிவிப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு விசேட காரணமும் பின்னணியில் இருக்கவில்லையெனவும் சில மாதங்களுக்கு முன்னரே ஒத்திவைக்க விரும்பிய போதிலும் நிதி சம்பந்தமான சட்டமூலங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததால் ஒத்திவைப்பு தாமதமடைந்ததாகவும் அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன மேலும் இது குறித்து விபரித்ததாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்குள்ள தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு எத்தகைய விசேட காரணங்களுமில்லை. இதனால் ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பி. க்கள் கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மேலதிக நேரம் கிட்டும். வெசாக் பண்டிகைக் காலத்தையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தொடர் ஒத்திவைப்பதற்கு முன்னதாக ஏனைய அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கேட்டறிந்திருக்க வேண்டுமென ஐ.தே.க. கூறுவதை ஒருபோதுமே ஏற்க முடியாது. ஜனாதிபதிக்கு அத்தகைய அவசியமில்லை.
பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமையால் செயலிழந்துவிடும். எனினும், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பதன் மூலமாக மீண்டும் அந்தத் தெரிவுக் குழுக்களை நியமிக்க முடியும். முன்னைய உறுப்பினர்களை விரும்பினால் நீக்கலாம். அதே உறுப்பினர்களே மீண்டும் தெரிவுக் குழுவில் இடம்பெற வேண்டுமென்ற அவசியமே கிடையாது.
பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. குற்றச்சாட்டுகளை கூறியோர் கூட தெரிவுக் குழுக்கள் முன்தோன்றி குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.
இந்நிலையில், தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முடக்கவே பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதென்ற எதிரணியினரின் வாதம் அர்த்தமற்றதாகுகிறது. முற்றிலும் சட்டவிதிகளுக்குட்பட்டே ஜனாதிபதியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, ஜனநாயக நாடென வர்ணிக்கப்படும் இந்தியாவிலும் இவ்வாறு பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதுண்டு. ஏர்ஸ்கின்மே நூலாசிரியர் கூட கூட்டத்தொடர் ஒத்திவைப்பு குறித்து பாராளுமன்றம் தொடர்பான நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது வழமைக்கு மாறானதல்ல.
மேலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பை கவனத்திற்கொண்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
தென்னிலங்கையில் நிலவும் மின்சார விநியோகமின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, மீன்பிடிக்கான வசதியின்மையாகிய ஒருசில சிக்கல்களேயுள்ளன. அவற்றையும் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மாகாண அதிகாரம் அரசாங்கத்தின் கரங்களுக்குச் செல்வது அவசியமாகும் என்றார்.