*வெட்கப்படுவதாகக் கூறுகிறார் பசில்
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதென்பதை எதிரணியினருக்கு ஞாபகமூட்ட விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராகக் கருத்துகளை வெளியிடுவது குறித்துத் தான் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை சாதாரண விடயம். கிழக்குத் தேர்தல், வெசாக் தின நிகழ்வுகளே இதற்கு அடிப்படைக் காரணம். இதனைவிட எதுவுமேயில்லை. இதை பொறுப்புடன் கூறுகிறேன்.
தற்போதுள்ள அரசியலமைப்பை ஏற்படுத்தியவர்கள் ஐ.தே.க.வினரே. அவர்கள் ஜனாதிபதிக்களித்த அதிகாரத்தினை எனது சகோதரர் பயன்படுத்தினார். இங்கு யதார்த்தம் இதுதான். நாங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. சிலர் தமது அரசியல் இருப்புக்காக எதையும் கூற முயலுவது நாகரிகமானதல்ல.
எமது அரசாங்கம் ஜனநாயகத்தை நேசிக்கிறது. கடந்த கால ஐ.தே.க. தலைவர்கள் போன்று நாம் செயற்படவில்லை. ஐ.தே.க. தலைவர்கள் எத்தனை முறை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்களென்ற விபரம் எம்மிடமுள்ளது.
ஏன் இவர்கள் பதற்றமடைகின்றனர் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கம் எத்தகைய சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. அதற்கான தேவை எமக்கில்லை.
பாராளுமன்ற ஒத்திவைப்பை எமது அரசாங்கத்தின் முடிவாக ரணில் கருதுகிறார். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் . மாகாணத் தேர்தல் முடிவடைந்த பின் எத்தனைபேர் எம்பக்கம் வருகிறார்களென்று? ஆம், இது நிச்சயம் நடைபெறும். பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்து பேசும் ரணிலுக்காக நான் வெட்கப்படுகிறேன்.
அமைச்சரவை மாற்றம் இக்காலப்பகுதியில் சாத்தியமில்லை. சில அமைச்சுகள் வெற்றிடமாகவுள்ளன. அவற்றுக்கு புதிய முகங்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார்.