* முடிவின் ஆரம்பம்; ரணில்
எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கையின் ஜனநாயக நடை முறையில் ஏதாவது எஞ்சியிருக்கின்றதென்றால் அதனையும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின் முதற்கட்டமே பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்த தீர்மானம் என்று குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஜனாதிபதி சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் சாடியுள்ளார்.
நாட்டின் ஜனநாயக அரசியல் இருப்புக்கு பலத்த சவால் விடுக்குமளவுக்கு அரசாங்கத்தின் முறைகேடுகள் மேலோங்கி இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க விசனம் தெரிவித்திருக்கின்றார்.
பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜனாதிபதியினால் திடீரென ஒத்திவைக்கப்பட்டதையடுத்து நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களை பாராளுமன்றக் கட்டிடத்துக்கு வரவழைத்து உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அரசியலமைப்பு விதிகளுக்கமைய பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும் அவ்வாறு கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதும் அதுபற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அவைத் தலைவருக்கும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், இன்று நான் பாராளுமன்றம் வரும்வரை இந்த நேரம் வரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தான், சபைக்குள் செல்ல முற்பட்டபோது அங்கு கதவு மூடப்பட்டிருந்தது. அங்கு நின்ற ஊழியர் ஒருவர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
இக்கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மாலை சபை முதல்வர் நிமால்சிறிபால டி சில்வாவை முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புத்தக வெளியீட்டு விழா வைபவத்தின் போது சந்தித்தேன். புதன்கிழமையும் வியாழக்கிழமையும் சபை அமர்வை நடத்திவிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கையை கருத்திலெடுத்து வெள்ளிக்கிழமை அமர்வைத் தவிர்த்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தேன். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட சில முக்கிய விடயங்கள் ஆராயப்படவும் , விவாதிக்கப்படவும் இருப்பதால் அமர்வை நிறுத்த முடியாதிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
எனினும் அவருக்கோ, அமைச்சர்களுக்கோ, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எனக்கோ எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படாமல் ஜனாதிபதி திடீரென பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.
இவ்வாறு காரணம் தெரிவிக்காமல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதையிட்டு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
அண்மைக் காலமாக நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. பாராளுமன்றச் செயற்பாடுகளை முடுக்கிவிட்டு ஜனாதிபதி தன்னிச்சையாக சர்வாதிகாரப் போக்கில் செயற்படத் தொடங்கியுள்ளார்.
இதனை முறியடிக்க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றுபட வேண்டும் . நிறைவேற்று அதிகாரத்தின்பேரால் நாட்டின் ஜனநாயக உரிமைகளை அபகரிக்க இடமளிக்க முடியாது. ஒரு ஜனநாயக நாட்டில் எவருக்கும் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட அனுமதிக்க முடியாது.
நிறைவேற்று அதிகாரம் கூட ஜனநாயகத்தை மதித்துப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்த பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைத்திருப்பதானது இன்றைய ஆட்சியின் முடிவின் ஆரம்பமாகும். அடுத்து நாம் பல சவால்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும். சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டிப் போராட தயாராகுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.