அரச படையினருக்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குமிடையே அண்மையில் முகமாலைப் பிரதேசத்தில் முக்கியமான யுத்தம் நடந்து முடிந்துள்ள போதிலும் படையினர் அப்பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினருடன் புதிய மோதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கடந்த 5 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இருதரப்பினருக்குமிடையே பெரும் மோதல்கள் நடந்துள்ளது. சம்பவதினம் காலை புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் முகமாலையில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்கள் மற்றும் பாதுகாப்பு பதுங்குகுழி நிலையங்கள் மீது அடிக்கடி பீரங்கி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்தே மேற்படி தீவிர மோதல்கள் மீண்டும் நடந்துள்ளது.
புலிகளின் தாக்குதல்களுக்கு தீவிர எதிர்த் தாக்குதலைப் படையினரும் மேற்கொண்டனர்.
புலிகள் இயக்கத்தினர் இவ்வாறு பீரங்கி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும்போதே மற்றுமொரு புலிகள் இயக்கக் குழுவினர் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரண்களைத் தகர்த்து முன்னேற முயன்றபோது இருதரப்புகளுக்கிடையேயும் மோதல்கள் மேலும் தீவிரமடைந்ததாகவும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களின்போது இராணுவத்தினர் பீரங்கி, மல்ரிபரல் மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரண்களுக்குள் நுழைய முயன்ற புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டதாகவும் மேலும் குறித்த சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
இராணுவத்தினர் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களில் புலிகள் இயக்கத்தரப்பில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சுமார் 50 பயங்கரவாதிகள் காயங்களுக்குள்ளானதாகவும் பாதுகாப்புப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் தரப்பிலான இந்த உயிரிழப்பு அவர்களின் செய்திப்பரிமாற்றங்களை அவதானித்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 5 ஆம் திகதி நடந்த இந்த மோதல்களின்போது படையினர் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்ததுடன் 14 படையினர் காயங்களுக்குள்ளாகினர். அதேவேளை, இராணுவ வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பாதுகாப்புத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முகமாலையில் இராணுவத்தினருக்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குமிடையே நடந்துவரும் பிந்திய மோதல்களில் புலிகளுக்குக் கூடுதல் இழப்புகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப: 6.5.2008