* விசாரணைக் குழுத் தலைவர் கூறுகிறார்
ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் விவகாரத்தை விசாரிப்பதற்காக இந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் நானாவதி, சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கடந்த 25 ஆம் திகதி பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்குமிடையிலான லீக் போட்டி மொகாலியில் நடந்தது. இப்போட்டியில் பஞ்சாப் அணி வென்றது. அந்த அணியின் ஸ்ரீசாந்துடன் கைகுலுக்கும் போது, மும்பை அணியின் கப்டன் ஹர்பஜன் அவரை கன்னத்தில் அறைந்தார். இதனால், ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க இந்திய கிரிக்கெட் சபையால் சுதிர்நானாவதி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை பார்வையிட்ட அவர் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
வீடியோ காட்சியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என்றாலும், இப்போது என் வேலை எளிதாகிவிட்டது. என்னுடைய விசாரணைக்கு இந்த வீடியோ ஆதாரம் மிகவும் உதவும். விசாரணைக்காக ஆஜராகும்படி, ஹர்பஜன், ஷ்ரீசாந்த் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளேன். வெள்ளி அல்லது சனிக்கிழமையன்று வருவதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். ஷ்ரீசாந்த் வரும் திகதியை இன்னும் தெரிவிக்கவில்லை.
ஸ்ரீசாந்த் பற்றி பத்திரிகையில் பேட்டியளித்ததால் இடை நிறுத்தப்பட்ட நடுவர் சாகிபாவிடம் நானாவதி ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளார். ஹர்பஜன், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அடித்தபோது அருகில் இருந்ததாகக் கூறப்படும் மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் திடமும் அவர் விசாரணை நடத்தவுள்ளார். விசாரணைகளை முடித்து, வரும் திங்கட்கிழமையன்று இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சரத் பவாரிடம் தன்னுடைய அறிக்கையை நானாவதி சமர்ப்பிக்கவுள்ளார்.