ஐ.பி.எல். வீரர்களுக்கான சம்பள உச்சவரம்பு அதிரடியாக நீக்கப்படுகிறது. அடுத்த சீசனில் ஒரு வீரர் 61 கோடி ரூபாவரை சம்பளம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தோனி தான் அதிகபட்சமாக 6 கோடி ரூபா பெறுகிறார். இவரது சம்பளம் 10 மடங்கு உயர வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை புரட்சிகரமான முறையில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) அமைப்பை தொடக்கியது. இதன் சார்பில் `ருவென்ரி - 20' தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த அணிகளை `ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானி முதல் நடிகர் ஷாருக்கான் வரை கோடிகளை கொடுத்து வாங்கினர்.
பின்னர் வீரர்களை ஏலம் மூலம் ஒவ்வொரு அணிகளும் வாங்கின. இதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்காக தோனி அதிகபட்சமாக 6 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார். போட்டிக்கான ஒளிபரப்பு உரிமை (ரூ.4,330 கோடி) சேர்த்து ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஐ.பி.எல். வர்த்தகம் நடந்தது.
தற்போது ஐ.பி.எல். `ருவென்ரி - 20' தொடருக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு காணப்படுகிறது. சர்வதேச அளவிலான வீரர்கள் பலர் தங்களது தேசிய அணிகளை உதறித் தள்ளிவிட்டு இவ்வமைப்பில் சேரக் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் அடுத்த சீசனில் வீரர்களுக்கான சம்பள உச்சவரம்பு நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்;
`இந்த ஆண்டு வீரர்களை ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக 20 கோடி ரூபா நிர்ணயித்திருந்தோம். இதன் மூலம் பணக்கார அணிகள் அதிக விலை கொடுத்து வீரர்களை இழுப்பதை தடுக்க முடிந்தது. அடுத்த சீசனில் (2009) இந்த சம்பள உச்சவரம்பு நீக்கப்படலாம். அணிகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பின் நிலைமை மாறலாம். எந்த அணியும்.... யாரையும் விலைக்கு வாங்கலாம். இந்த நிலைமை மிக விரைவில் ஏற்படலாம்" என்றார்.
இதையடுத்து, அவுஸ்திரேலிய வீரர்களான ஹைடன், பிரட் லீ, மெக்ராத் உள்ளிட்டவர்கள் சம்பளம் பல மடங்கு உயரும்.
இதுபற்றி ஹைடன் கூறுகையில், " அடுத்த ஆண்டு ஒவ்வொரு வீரரும் மிகப் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது", என்றார். அவுஸ்திரேலிய நிருபர் ஒருவரிடம் தோனி கூறுகையில், "அடுத்த சீசனில் வீரர்கள் சுமார் 61 கோடி ரூபா வரை ஒப்பந்தம் செய்யப்படலாம்" என்றார்.