Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள்
[09 - May - 2008] [Font Size - A - A - A]
-எஸ். ரவீந்திரன் -

பள்ளிக்கூடங்கள் பாடங்களைக் கற்றுத் தருவதுடன் மாணவர்களுக்கும் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற நல்ல விடயங்களையும் கற்றுத் தருகின்றன. அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்புக்கு நல்ல மரியாதையும் பயமும் இருந்தது.

குருகுலம் என்று சொல்லக் கூடிய அளவுக்குப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் சிறந்தவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமையே வேறு.

ஒரு சில பள்ளிகள் மட்டுமே குறிப்பிடும் படியாக கல்விச் சேவை பயிற்றுவித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

இவற்றுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் சிலரின் செயற்பாடுகள் பள்ளிகளின் நன்மதிப்பையும் கல்வியின் பெருமையையும் சீரழித்து வருகின்றன.

அண்மைக் காலமாகவே பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஒழுங்கீனம் பெற்றோர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. எழுத்தறிவித்தவன் இறைவனுக்குச் சமம் என்று கருதப்படும் நிலை கேவலமாக மாறி விட்டது,.

அண்மையில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து ஆட்டம் போட்ட செய்தி நம்மைத் திகைக்க வைத்தது. இதே போல மற்றொரு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் ஆடைகளைக் களைந்து நிர்வாண நடனமாடச் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெற்றோர்களை பதறச் செய்துள்ளது.

இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பலர் உள்ளனர். ஏற்கெனவே, பாலியல் கல்வியைப் பாடமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர்கள் இது போன்ற சம்பவங்களைச் சற்று நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்.

பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கவே ஆசிரியர்கள் என்ற நிலைமை மாறி வருவது எதிர் கால சந்ததியினருக்கு பாதிப்பையே உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

வெளிநாடுகளில் மாணவர்கள் மத்தியில் வன்முறை மனப்பான்மையும் பாலியல் தொடர்பான எண்ணங்களும் அதிகரித்து வருவதை அறிவோம். அதே நிலை இன்று நம் நாட்டையும் மெல்ல மெல்ல தொற்றிக் கொண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு அடிப்படைக் காரணங்கள் ஆசிரியர்கள் மத்தியில் போதிக்கும் திறன் இல்லாமையும். சுய ஒழுக்கம் இல்லாமையும் தான்.

ஆசிரியர் பணிக்கு உள்ள மரியாதையும் மதிப்பும் இன்று மாறி வருகின்றது. பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளியில் ஒரு தொகை தனியார் டியூஷன் என்ற பெயரில் ஒரு தொகை என அதிக வருவாய் ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை நல்ல மாணவர்களை உருவாக்குவதில் காட்டினால் நல்லது.

மேலும், தனியார் பள்ளிகளின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடிவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு கல்விக் கட்டணங்களைக் குவிப்பதில் காட்டும் கவனத்தை ஆசிரியர்கள் தேர்விலும் ஒழுக்கத்திலும் காட்டுவதில்லை.

தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அவ்வப் போது நடைபெறுகின்றன. விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதை வெளியில் சொல்லாமல் பலர் தற்கொலை செய்து கொள்வதும் நடந்தேறி வருகின்றது. அரசுப் பள்ளிகளில் நடைபெற்றால் அச் சம்பவம் விரைவில் அனைவருக்கும் தெரிந்து விடுகின்றது. அதே தனியார் பள்ளிகள் என்றால் மிக இரகசியமாக மூடி மறைக்கப்படுகின்றது.

இதற்கு அரசியல் சக்திகளும் துணை போவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து அட்டகாசம் செய்த பலர் பள்ளிகளைத் தொடங்கி நல்லவர்களாக உலா வருவதும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

எனவே, தனி மனித ஒழுக்கம் சுய கட்டுப்பாடு இல்லாத ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்தல் வேண்டும். அவர்கள் அந்தப் புனிதமான பதவியில் எந்தக் காலத்துக்கும் இருக்க அருகதையற்றவர்கள் என நிரந்தரமான தண்டனை அளித்தால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்பவர்கள் எக் காலத்திலும் மன்னிக்க முடியாதவர்கள் என்பதால் தவறிழைக்கும் ஆசிரியர்களையும் இந்த வரிசையில் சேர்க்க வேண்டும்.

ஆசிரியர் பணிக்காக தங்களை மெழுகுவர்த்தியாக மாற்றிக் கொண்ட மாசற்றவர்கள் வாழ்ந்த இந்தப் பூமியில் கள்ளத்தனமும் மாசு நிறைந்தவர்களும் ஆசிரியப் பணியில் இருப்பது மன்னிக்க முடியாது என்றே கூற வேண்டும்.

இனியாவது பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடராத வகையில் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமனி

Email this page Your Opinion Print this page
எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை போர்ச் சூழலில் இலங்கை அடைய முடியாது
மூத்த பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவாவின் நூல் வெளியீட்டு விழாவில் கேட்டவை
பிள்ளைக்கவி சிவராசசிங்கத்துக்கு நாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கௌரவம்
விடைக்கொடி
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com