இமயம் முதல் சிவ வழிபாடு நடைபெறும் நாடுகளில் நந்தியம் பெருமானுக்குத் தனிச்சிறப்புண்டு. சிந்துவெளிக் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற உருவங்களில் விடை முதன்மை பெறுவதை அயல்நாட்டு அறிஞர்களும் போற்றுகின்றனர். சங்கப் பாடல்களில் புறநானூற்றில் வெள்ளை ஏழு ஊர்தியாகவும் கொடியாகவும் விளங்குகின்றது என்று கூறுகிறது.
"ஊர்தி வால் வெள்ளேறே சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப" என்றும் `ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணி மிடற்றேன்" என்பன புறநானூற்றுப் பாடல்களாகும்.
பத்துப் பாட்டில் முதல் பாடலான திரு முருகாற்றுப் படையில் உமை அமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனான சிவபெருமான் வெள்ளை ஏற்றினை கொடியாகவும் ஊர்தியாகவும் உடையவன் என்பதை நக்கீரர்,
"...வெள்ளேறு வலம்வயின் உயரிய பலர் புகழ் திணிதோள்" என்று அருளியுள்ளார்.
முழுமுதலாகிய சிவனுக்குக் கொடியாகவும் ஊர்தியாகவும் விளங்கும் நந்தியைப் போல மற்றைக் கடவுளர்க்குச் சிறப்பாகக் காலத்தால் மூத்தவாகக் கூறப்படுவது மிகுதியாக இல்லை.
மேலும், நந்தி தனக்கென வாழாமையை அடையாளம் காட்டும் சின்னமாக விளங்குகிறது. ஆதலின் திருக்கோயில் பீடத்து அருகில் எழுந்தருளிய நந்தியின் சிறப்பைப் புறநானூறு "உழுத நோன் பகடு அழிதின்றாங்கு" என உவமை கூறி வள்ளல்களின் தன்னலமற்ற உதவியை எடுத்துக் காட்டப்படுகின்றது. எருது உழவர்க்கு பலவகையிலும் உதவியாக இருந்து விளைபொருளை வளப்படுத்துகிறது. விளைந்த நெல் முதலியவற்றை உழவர்களும் பலரும் பயன்படுத்தி வாழ்கின்றனர். எருது பயன்படாத வைக்கோல், தவிடு ஆகியவற்றை உண்ணும். அதுவும் மேலும் உழவர்கட்கு உழைப்பதற்காக என்பதால் "உழுத நோன் பகடு அழிதின்றாங்கு" என்று கூறப்படுகிறது.
திருமுறைகளில் பல பாடல்கள் விடையைக் குறிக்கின்றது. விடை காட்டும் கொடியானும் என்று திருவெண்காட்டுப் பதிகத்தில் விடை காட்டுதல் சிறப்பிக்கப்படுகிறது.
"கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்போ? என்று யானை, குதிரை உகந்து ஏறாமல் இடபம் ஏறிய கை வினவி, விடையாக முப்புரம் எரித்த போது திருமால் வேறு உருக்கொள்ளாமல் விடை உருவம் கொண்டுமால் விடையாய் நின்ற பெருமையை மணிவாசகப் பெருமான்,
"தடமதில்கள் அவை மூன்றுந் தழல் எரித்த
அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலே" என்று திருக்காழலில் அருளுகின்றார்.
நமது குரு முதல்வர் சாந்தலிங்கப் பெருமான் சிவபெருமான் அம்பிகையோடு ஆனேறி வந்து அருளிய அருட்காட்சியை காணப்பெற்றவர். இதனை `ஆனேறு இவர்ந்து என்னெதிரே விரைந்து அன்று வந்தோய்க்கு' என்றும் பிரானே திருத்தில்லை உளாய் அன்று இப்பேதையேன்முன்
ஓரானேறி இவர்ந்து அம்பிகையோடு எளிது ஓடி வந்தாய் என்று அருளினார்.
இத்தகைய சிறப்புடைய நந்திக்கொடி(விடைக்கொடி) நமது திருக்கோயில் பெருவிழாக்களில் எங்கும் ஏற்றப்படுகிறது. இதனை மனங்கொண்டு நமது அன்பிற்கும் பாராட்டிற்கும் உரிய தனபாலா அவர்கள் பெரும் பொருட் செலவில் நந்திக்கொடியை (விடைக்கொடி) உருவாக்கி உலக நாடுகளில் நடைபெறும் மாநாடுகளிலும் சிவராத்திரி விழாக்களிலும் நந்திக்கொடியேற்றிப் பயன்பெற வழங்கி வருகின்றார். தானும் உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் உலக சைவ மாநாடுகளிலும் பங்கேற்றுச் சிறப்பிப்பது பாராட்டுக்குரியது.
"விடைக்கொடியை தமக்கு உடையதாக ஏற்கும்" சிவபெருமானுக்கு உமையம்மையாகிய அங்கயற் கண்ணியம்மை மதுரையை ஆட்சி செய்ய வழங்கிய செய்தியை, "விடைக்கொடியவற்கு கொரு கொடுத்த கொடி என்று"மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் கூறுகிறது. இப்பணியில் பெரிதும் ஈடுபாடுடைய சிவத்திரு தனபாலா அவர்களும் குடும்பத்தாரும் நலம் பல பெற்று இனிது வாழ அம்பலவாணர் திருவருளையும் சாந்தலிங்கம் தண்ணருளையும் வேண்டி வாழ்த்துகின்றோம்.
பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க -இராமசாமி அடிகளார்