* ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
பிள்ளைக்கவி சிவராசசிங்கம் யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்கில் 01.04.1931 இல் சிதம்பரநாதன் வல்லிபுரத்திற்கும் பார்வதிப்பிள்ளை வல்லிபுரத்திற்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் கரவெட்டியார்க்கர் விநாயக வித்தியசாலைத் தாபகர் ஆவார்.
இவர் ஆரம்ப கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம், விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் பெற்றார். உயர்நிலை கல்வியை திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழக இணைவு), சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (சென்னைப் பல்கலைக்கழக (இணைவு), கல்கத்தா சீராம புரிக் கல்லூரி (கல்கத்தா பல்கலைக்கழக இணைவு) ஆகியவற்றில் கற்றார். B.A.Hons (English) பெற்ற இவர் தமது ஆசிரிய சேவையை யாழ் இடைக்காடு மகாவித்தியாலயம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆற்றினார்.
அரசகரும மொழித்திணைக்களத்தில் உதவி ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்ற பின் யாழ்பல்கலைக்கழக இடை வருகை விரிவுரையாளராக (ஆங்கிலம்) சேவைபுரிந்துள்ளார். இவர் தமிழ் வழி ஆங்கிலம், கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் உரை, நயினைநாகபூசணி அம்மைபிள்ளைத் தமிழ், கொக்குவில் கிருபாகரமூர்த்தி பிள்ளைத்தமிழ், வல்லிபுர மாயன் கோவை, தெகிவளை நெடுமால்கோவை, தச்சைச் சிலேடை வெண்பா உரை, யார்கரு அந்தாதி உரை நாவலன்கோவை, கலாநிதி மு.கந்தையா அவர்களுடன் இணைந்து செய்த உரை, கனகை விநாயகர் பிள்ளைத் தமிழ், அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கந்தபுராணசாரம் ஆங்கிலத்திலும் கனவை விநாயக பிள்ளைத்தமிழ், தமிழ் - ஆங்கில அகராதி என்பன விரைவில் வெளிவர ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார். திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரியில் கல்விகற்கும் போது இரண்டு வருடம் தமிழ்பேரவை செயலாளராகவும் இளநிலைய வகுப்பு ஆங்கில கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசையும் பெற்றார்.
கல்கத்தா பல்கலைக்கழக முதுநிலைத் தமிழ்ப் பரீட்சையில் முதலாவதாக தேறிய காசிவாசி சுவாமிநாத தேசிகர் பரிசு வழங்கப் பெற்றவர். இவருக்கு பிள்ளைகவி, உரை விற்பனர் ஆகிய பட்டங்களை இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டதாகும்.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஆங்கில போதனை, புராண படலம் ஆகியவை செய்து வருபவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து பல பணிகள் புரிந்துள்ளார். நாளை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் `மண்வாசம்' இலக்கிய மலர் அறிமுகவிழாவில் தவராசசிங்கம் கௌரவிக்கப்படவிருக்கிறார்.