பாராளுமன்றக் கூட்டத் தொடர் எதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டது? கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சகலரினதும் கவனம் குவிந்திருக்கும் பரபரப்பு மிகுந்த ஒரு அரசியல் சூழ்நிலையில் சபாநாயகருக்குக் கூட தெரியப்படுத்தாமல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சடுதியாக பாராளுமன்றத் கூட்டத் தொடரை இடைநிறுத்தி வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானம் நாட்டு மக்கள் மனதில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அரசாங்கத் தரப்பில் குரல் தரவல்லவர்கள் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எந்தவிதமான விசேட காரணமும் இல்லை என்றும் இது வழமையான ஒரு நடவடிக்கையே என்றும் கூறுகின்ற அதேவேளை, எதிர்க்கட்சிகளோ இதற்கு அந்தரங்க நோக்கங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்ற அந்தரங்க நோக்கங்களை நிராகரித்திருக்கும் அரசாங்கப் பேச்சாளர்கள் தற்போதைய பாராளுமன்றக் கூட்டத் தொடர் சுமார் நான்கு வருடங்களாக நீடித்துவருவதால் ஒரு இடைநிறுத்தம் தேவைப்பட்டது என்று நியாயம் கற்பிக்கிறார்கள். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் இடைநிறுத்துவற்கும் அல்லது கலைப்பதற்கும் அரசியலமைப்பினால் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின் கீழேயே ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த திடீர் நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வியாக்கியானங்களில், விளக்கங்களில் எந்தவொன்றையும் எதிரணி ஏற்றுக் கொள்ளத்தயாராயில்லை. பாராளுமன்றக் கூட்டத் தொடரை இடைநிறுத்திய ஜனாதிபதியின் செயலை இந்தநாட்டில் ஜனநாயக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான முதற்படியாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காண்கிறார். நேற்று முன்தினம் புதன்கிழமை காலை பாராளுமன்றச் சபாமண்டபத்தின் கதவுக்கு அண்மையாகச் சென்ற போது அங்கு நின்ற ஊழியர் ஒருவரினால் தெரிவிக்கப்படும் வரை கூட்டத்தொடர் இடைநிறுத்தி வைக்கப்பட்டமை விக்கிரமசிங்கவுக்கு தெரியாதாம்! பல காரணங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி கூட்டத் தொடரை இடைநிறுத்தி வைக்கத் தீர்மானித்ததாக எதிரணிக் கட்சிகள் கூறுகின்றன. அண்மைக்காலமாக கடுமையாக அதிகரித்திருக்கும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுத்தல், பொதுக் கணக்குக் குழுவின் இடைக்கால அறிக்கையொன்றை அதன் தலைவரான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்தல், கிழக்கில் தொடருகின்ற தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை பிரச்சினை கிளப்புவதைத் தவிர்த்தல் ஆகியவை கூட்டத்தொடர் இடைநிறுத்தத்திற்கு எதிரணி கற்பிக்கும் காரணங்களில் சிலவாகும்.
புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கத் தவறிய ஜனாதிபதியின் செயலையும் சில சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் தோல்வி ஏற்படக்கூடுமென்ற அரசாங்கத் தரப்பினரின் பயமும் கூட கூட்டத்தொடர் இடைநிறுத்தத்துக்கான காரணங்களில் அடங்குவதாக வேறுசில எதிரணிக் கட்சிகள் கூறுகின்றன. இந்தப் பின்புலங்களில் வைத்து நோக்குகையில் தற்போதைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இடைநிறுத்தம் இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்நோக்கிய முன்னைய அரசாங்கங்களினால் செய்யப்பட்ட இடைநிறுத்தங்களில் இருந்து பெரிதாக வேறுபட்டதாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டத்தொடர் இடைநிறுத்தங்களும் பாராளுமன்ற கலைப்புகளும் முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளினால் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகின்ற பாரம்பரிய நடைமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் இசைவானவையாக இருந்ததில்லை. பல சந்தர்ப்பங்களிலே ஜனநாயகக் கோட்பாடுகள் என்று கூறப்படுபவை அல்ல, வெறுமனே அரசியல் சந்தர்ப்பவாதமும் அனுகூலமுமே கூட்டத்தொடர் ஒத்திவைப்புகளுக்கும் பாராளுமன்றக் கலைப்புகளுக்கும் காரணங்களாக அமைந்திருந்தன. மக்களின் தேவைகளைப் பற்றியோ அல்லது அவர்களின் மனநிலையைப் பற்றியோ அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. பாராளுமன்றத்தைக் கலைத்து உரிய காலத்துக்கு முன்னரே தேர்தல்களை நடத்துவதனால் ஏற்படக்கூடிய வீண் செலவுகள் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் வாழ்வுக்கு ஏற்படக் கூடிய தடங்கல்களைப் பற்றி அரசியல்வாதிகள் யோசிப்பதில்லை. சகலதையுமே அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாத நோக்கிலேயே அணுகுகிறார்கள். அத்தகைய ஒன்றுதான் இப்போது இடம்பெற்றிருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடர் இடைநிறுத்தமும்!