பாகிஸ்தானில் பிற்போடப்பட்டுள்ள இடைத் தேர்தலை திட்டமிட்ட படி அடுத்த மாதமே நடத்துமாறு தேர்தல் ஆணையகத்தை அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு பாராளுமன்ற ஆசனங்கள் மற்றும் 30 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் திகதி அங்கு நடைபெறவிருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு தேர்தல் பிற்போடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.
இந்த முடிவு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சிக் கூட்டணியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஆணையகத்தை வலியுறுத்துமாறு வடமேற்கு எல்லைப்புற மாநில அரசைக் கேட்டதாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ரெஹ்மான் மாலிக் மீது நவாஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இதனால் தான் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் முடிவை தேர்தல் ஆணையகம் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்குக் காரணமான ரெஹ்மான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுக் கொண்டது. இதனால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும் பிரதமர் யூசுப் ராஸா கிலானியும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து இது குறித்து விவாதித்தனர். இடைத் தேர்தலை ஒத்தி வைப்பதாக எடுத்த முடிவை கைவிட்டுத் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாகத்தைக் கேட்பதென இதன் போது அவர்கள் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் எனக்கேட்டு தேர்தல் ஆணையகத்துக்கு கடிதம் எழுதுமாறு மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.
இதற்கிடையியே சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பிய அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டு புதிய அறிக்கையை அனுப்ப வடமேற்கு எல்லைப்புற மாநில அரசு முடிவு செய்திருக்கின்றது.