பாகிஸ்தான் இடைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் போட்டியிடாமைக்கு பெனாசிர் கட்சியினரின் அணுகுமுறை ஏமாற்றமளிப்பதே காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் விரைவில் நடக்க இருக்கின்ற இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் போட்டிடுவதில்லையென முடிவு எடுத்து இருக்கிறார்.
கூட்டணி கட்சியான பெனாசிரின் மக்கள் கட்சித் தலைமையின் போக்கு மீது ஏற்பட்ட அதிருப்தியால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும் 4 சட்டசபைகளுக்கும் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலில் பாராளுமன்றத்துக்கு போட்டியிட நவாஸ் ஷெரீப் முதலில் திட்டமிட்டு இருந்தார்.
இப்போது அவர் அந்த முடிவில் இருந்து மாறி விட்டார். இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்து இருக்கிறார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சினையில் கூட்டணி கட்சியான மக்கள் கட்சி தலைமையின் அணுகுமுறை அதிருப்தி அளிப்பதால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற தகவலை முஸ்லிம் கட்சியின் இணைச்செயலாளர் சித்திக் உல் பரூக்கி உறுதிப்படுத்தினார். ஆனால் இதற்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை.
நீதிபதிகள் பிரச்சினையில் மக்கள் கட்சி தலைமையின் அணுகுமுறை ஏமாற்றம் அளிப்பதால் அவர் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்து இருப்பதாக முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
அவர் தன் முடிவை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் தெரிவித்துவிட்டார் என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்து விட்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு மக்கள் கட்சி சம்மதம் தெரிவித்தபோதிலும் அதற்காக காலக்கெடு எதுவும் விதிப்பதை அந்த கட்சி ஏற்கவில்லை. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள் நீதிபதிகள் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும். அப்படி நியமிக்கப்படா விட்டால் ஆட்சியில் இருந்து விலகுவது என்றும் நவாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார்.