மியன்மாரை தாக்கிய சூறாவளியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாமென கருதப்படுவதாக அமெரிக்க இராஜ தந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜராவட்டி கழிமுகப் பகுதியில் 100,000 இற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்பதற்கான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக மியன்மாரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அநர்த்த விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஷாரி வில்லரோஸா தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில்;
இது உறுதிப்படுத்தப்பட்ட தொகையல்ல. ஆனால், சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் மியன்மார் அரசு மேற்கொண்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இது 70,000 ஆக உயர்ந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச ரீதியிலான தன்னார்வ அமைப்புகள் மியன்மாருக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை இராணுவ ஆட்சியாளர்கள் தளர்த்த வேண்டுமென உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், மியன்மாருக்குள் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படாமையால் அத்தியாவசியப் பொருட்களை காவிச் சென்ற தமது விமானங்கள் மியன்மாருக்குள் நுழைய முடியாமல் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நிலைமை மேலும், மோசமடைவதற்கு முன்னர் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும் விமானங்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் படி மியன்மார் அரசை ஆசியான் வலியுறுத்தியுள்ளது.
சில பகுதிகளில் தற்போதும் உடல்கள் சிதறுண்டு கிடப்பதாகவும் உயர் பிழைத்த மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் போராடுவதாகவும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ பணியாளர் தெரிவிக்கின்றனர்.
10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
மியன்மார் அதிகாரிகளின் அனுமதிக்காக உயர் சத்துக்களடங்கிய பிஸ்கட்டுகளைக் கொண்ட விமானங்கள் பாங்கொக், டாக்கா விமான நிலையங்களில் காத்திருப்பதாக உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.