நேபாளத்தின் மன்னராட்சியின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக அந்நாட்டு மன்னர் கயனேந்திரா தன்னைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகவல் அரண்மனை வட்டாரங்களிலிருந்தே தனக்குக் கிடைத்துள்ளதாக பிரசண்டா குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதென்ற அடிப்படையில் கடந்த மாதம் அங்கு நடைபெற்ற தேர்தல்களில் பிரசண்டாவின் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு கயனேந்திராவை அரண்மனையிலிருந்து கௌரவமாக வெளியேற்றுவது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு பிரசண்டா விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னராட்சியை இழிவுபடுத்தும் சொற்பதங்களை அடிக்கடி பயன்படுத்தும் பிரசண்டா, மன்னர் மீதான தனது வெறுப்பை மறைப்பதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை.
இருந்தபோதும், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மன்னரைச் சந்திப்பதற்கு தான் தயாராகவுள்ளதாக பிரசண்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பி.பி.ஸி.க்கு கருத்துத் தெரிவித்த பிரசண்டா;
எனது விருப்பத்திற்கு சாதகமான பதில்கள் அரண்மனை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளன. ஆனால், இப்பேச்சுகள் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடிப்படையில் மட்டுமே அமையுமென்பதை மன்னர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு அவர் மதிப்புக் கொடுக்காவிட்டால் தீய விளைவுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும். ஆனால், முட்டாள்தனமான முடிவுகளை அவர் எடுக்கமாட்டாரென நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னர் தன்னிச்சையாக முன்வந்து இராஜிநாமா செய்வாரென தான் எதிர்பார்ப்பதாகவும் பிரசண்டா தெரிவித்துள்ளார்.