சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான உறவில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையொன்றில் இரு நாட்டு தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களுக்குமிடையில் வருடாந்த உச்சி மாநாடுகளை நடத்துவது உட்பட எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் சிறப்பானதொரு உறவு நிலவுவதற்கான திட்டங்களுக்கு சீன ஜனாதிபதி ஹுஜிந்தாவோவும் ஜப்பானிய பிரதமர் யசுஓ புகுடாவும் இணங்கியுள்ளனர்.
போர்க்கால வரலாறு மற்றும் கரையோர வளங்கள் போன்ற சர்ச்சைகளினால் இரு நாட்டுக்குமிடையிலான உறவு பல வருடங்களாக விரிசலடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1972இலிருந்து கைச்சாத்திடப்பட்ட இது போன்ற உடன் படிக்கையின் வரிசையில் புதிதாக கைச்சாத்திடப்பட்ட இவ் உடன் படிக்கை நான்காவதாகும்.
இது தொடர்பில் இரு தலைவர்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், 21 ஆம் நூற்றாண்டில் உலகில் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதில் இரு நாட்டுக்கும் பாரிய பொறுப்புகள் உண்டென்பதை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இரு தலைவர்களும் இரு நாடுகளிலும் மாறி மாறி உச்சிமாநாடுகளை நடத்தவும் இணங்கியுள்ளனர்.
இதுதவிர, தென் சீனக் கடலில் எரிவாயுக் களஞ்சியத்தை அமைக்கும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென இரு தலைவர்களும் உறுதியெடுத்துள்ளதாக புகுடா தெரிவித்துள்ளார்.
1998 இற்குப் பின்னர் சீனத் தலைவரொருவர் ஜப்பானுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.